2026 மே 09, சனிக்கிழமை

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு: பொன்.செல்வராசா

Kogilavani   / 2013 ஜூன் 22 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்

கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப பாடத்திற்குரிய பாடசாலைகள் தெரிவில் கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இப்பாடத்தெரிவிற்காக நாடெங்கிலும் முதற்கட்டமாக 200 பாடசாலைகளில் உள்வாங்கப்பட்டுள்ளன. கிழக்கு  மாகாணத்தை பொறுத்தவரையில் தமிழ் பாடசாலைகளுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது இப் பாடசாலை தெரிவு தொடர்பான பட்டியல் மூலம் அறிய முடிகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை 72சத வீதம் தமிழர்கள் வாழும் மாவட்டமாக இருந்தும் ஒரு தமிழ் பாடசாலை கூட தெரிவாகவில்லை.

தொகுதி அடிப்படையில் இப் பாடசாலைகள் தெரிவு இடம்பெற்றுள்ளது. கல்குடா மற்றும் இரட்டை தொகுதியான மட்டக்களப்பு தொகுதிகளுக்கு தலா ஒரு முஸ்லிம் பாடசாலை என இரு முஸ்லிம் பாடசாலைகள் தெரிவாகியுள்ளன.

தனித் தமிழ் பாடசாலைகளை மட்டும் கொண்டுள்ள பட்டிருப்பு தொகுதிக்குரிய பாடசாலையாக கல்குடா தொகுதியிலுள்ள மற்றுமோர் முஸ்லிம் பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலும் இதேநிலைதான் காணப்படுகின்றது. சம்மாந்துறை -கல்முனை தொகுதிகளில் இரு முஸ்லிம் பாடசாலைகள் தெரிவாகியுள்ள அதேவேளை இரட்டைத் தொகுதியான பொத்துவில் தொகுதியிலிருந்தும் மேலும் இரு முஸ்லிம் பாடசாலைகள் என நான்கு முஸ்லிம் பாடசாலைகள் தெரிவாகியுள்ளன.

இப்பாடத்திட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு தமிழ் பாடசாலை கூட தெரிவு செய்யப்படவில்லை.

இதனால், மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப பாடத்தை கற்கும் வாய்ப்புகளை முற்றாக இழக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

இதன் காரணமாக கிழக்கு மாகாண பாடசாலைகள் தெரிவில் தமிழ் மாணவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

இது தொடர்பில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகபெருமவை தொடர்பு கொண்டுகேட்டபோது அதற்கு அவர், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இருக்கலாம் என்றும் தமிழ் பாடசாலைகள் உள்வாங்கப்படும் எனவும் உறுதிமொழி வழங்கினார்.

ஜனாதிபதியினால் கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகையில் இத் தொழில்நுட்பப்பாடம்  உத்தியோகப்பூர்வமாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. ஆனால், இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து  எந்தவொரு தமிழ் பாடசாலைகளும் அழைக்கப்படவில்லை.

இதுவரை தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தன. தமிழ் பாடசாலைகளும் உள்வாங்கப்படும் என்ற உறுதிமொழியை ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் தந்திருந்த போதிலும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் அமைச்சரை தொடர்புகொள்ள முயன்ற போதிலும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு அமைச்சரால் வழங்கப்பட்ட உறுதி மொழி பற்றி  சுட்டிக்காட்டியபோது 'தமிழ் பாடசாலைகள்  நிச்சயம்  உள்வாங்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அவரால் பதில் தரப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • sutha Saturday, 22 June 2013 08:37 AM

    அறிக்கை விடுவதைத் தவிர உங்களால் என்ன செய்ய முடியும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .