-தேவ அச்சுதன், ரி.எல்.ஜவ்பர்கான்
மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று எல்லோரும் சேர்ந்து எதிர்வரும் 3 ஆண்டிற்குள் 21 வீதமாக இருக்கிற மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை 5 வீதமாகவேனும் குறைத்தாகவேண்டும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான அலுவலக உபகரணம் வழங்கலும், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அனைத்துவிதமான அனர்த்தங்களாலும் பாதிக்கப்படும் நமது மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தினை முழுமையாகக் கட்டியெழுப்ப முடியாவிட்டாலும், வறுமையை முழுமையாக நீக்கி முன்னேற்றமடையச் செய்வதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும்.
கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது பல பில்லியன் ரூபாய்கள் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவும் எமது மாவட்டத்தினுடைய பொருளாதாரம். அதற்காக எந்த ஒரு நட்ட ஈட்டையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாது போனது. அதற்கு காப்புறுதி செய்யாமை காரணமாக இருந்தது.
எனவே தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும்.
அதற்கு முக்கியமானது, கிராம மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அலுவலர்களாகிய நீங்கள், தகவல்களைத் திரட்டும்போது சரியான தகவலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் விடும் ஒரு தவறு நாட்டையே பிழையான செயற்பாட்டுக்கு கொண்டு சென்றுவிடும். எனவே நீங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டிலுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுத்திய திட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 16 ஆயிரம் பட்டதாரிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைக்கப்பட்டுள்ளார்கள். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம மட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக உபகரணங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தத் தளபாடங்கள் வழங்குவதன் ஊடாக உங்களிடம் நிறையவும் வேலைகளை எதிர்பார்க்கிறோம்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் உள்வாங்கப்பட்டதையிட்டு உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். எங்களுடைய அமைச்சில் உள்வாங்கப்பட்டவர்களுக்கு இரண்டு வாரப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. கடிதங்கள் வழங்கப்படுவதற்கு முன்னரே அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்குரிய அதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எல்லாவற்றையும் செய்து நாங்கள் எதிர்பார்ப்பது பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவது. மட்டக்களப்பு மாவட்டம் மிகுந்த வறுமையைக் கொண்ட மாவட்டமாக உள்ளது. மிகக் கொடுமையான யுத்தத்தினை அனுபவித்த முல்லைத்தீவு மாவட்டம் கூட நமது வறுமை நிலையில் இல்லை. நீங்கள் வெறுமனே ஓர் அரசாங்க உத்தியோகத்தர் போல் அல்லாமல், மனிதாபிமான ரீதியில் வறுமையை ஒழிப்பதற்கான சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். ஆகக் குறைந்தது இந்த வருடத்துக்குள் 25 குடும்பத்தையாவது வறுமையிலிருந்து வெளியில் கொண்டுவரவேண்டும்.
நீங்கள் எதிர்காலத்தில் கிராமத்தின் அபிவிருத்திக்குப் பொறுப்பாக அமைக்கப்படவுள்ள ஜனசபரின் செயலாளராகவும் இருப்பீர்கள். ஆகவே நீங்கள் தான் அந்தக் கிராமத்தின் தலைவர்கள். எங்களுடைய அமைச்சின் கீழ் வருகின்ற சமுர்த்தி, விவசாய உத்தியோகத்தர்கள் என அனைவரும் உங்களுக்குக் கீழ்தான் இருப்பார்கள். கிராமத்தின் அபிவிருத்திக்கு நீங்கள் தான் பொறுப்பானவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு பயிற்சி வழங்கியதன் நோக்கம் தலைமைத்துவத்தினை வளர்ப்பதற்காகவே.
கிராமத்திலுள்ள குடும்பங்களின் வறுமையை ஒழிப்பதன் மூலமே பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்ப முடியும்.
உங்கள் அனைவரையும், அபிவிருத்தி சேவை என்ற ஒன்றை உருவாக்கி அதனுள் உள்வாங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுள்ளன. நீங்கள் உயர் கல்விகள் கற்றால் அதற்கேற்றால் போல் பதவி உயர்வுக்கு உள்வாங்கப்படுவீர்கள். நீங்கள் திட்டமிடல் துறையில் கற்று முன்னேற்றமடைய வேண்டும்.
கடந்த தெயட்ட கிருள வெலைத்திட்டத்தில் கண்காட்சி நடைபெற்ற அம்பாறை மாவட்டத்தினை விடவும் அதிகமான நிதிகள் அபிவிருத்தி வேலைகளுக்காக பெறப்பட்டிருந்தன.
4600 மில்லியன் ரூபா வரையில் அபிவிருத்தி வேலைகளுக்காக பகிரப்பட்டிருந்தன. அதேபோலவே ஒதுக்கப்பட்ட நிதிகள் மிகவும் சிறப்பாக செலவிடப்பட்டிருந்தன. ஒதுக்கப்பட்ட நிதிகள் செலவிடப்பட்டு தேவைக்கு மேலதிகமான நிதிகள் பெறும் அளவுக்கு வேலைகள் நடைபெற்றிருக்கின்றன. இதற்காக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.