2026 மே 14, வியாழக்கிழமை

dd

நுளம்பு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக வழக்கு

Super User   / 2013 ஜூலை 07 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகரில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக வீட்டு உரிமையாளர்கள் மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து ஏறாவூர் நகரத்திலுள்ள வீடுகளையும் வீட்டுச் சுற்றாடலையும் சோதனையிட்டது. இதன்போதே மேற்குறிப்பிட்ட வீட்டுச் சுற்றாடல் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் வகையில்  காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல முறை விழிப்புணர்வூட்டப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னரே தாம் இத்தகைய கடுமையான நடவடிக்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி சொன்னார். தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் ஒரு கட்டமாக ஏறாவூர் நகரில் இடம்பெறும் டெங்கு ஒழிப்புப் போராட்டத்தில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்தார்கள் என்ற காரணத்தினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் எச்சரிக்கப்பட்டதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்

டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் தேசிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்து ஏறாவூர் நகரத்திலுள்ள அலுவலகங்கள், பாடசாலைகள், உற்பத்தித் தொழிற்சாலைகள் என்பனவற்றைச் சோதனையிட்டபோதே ஏறாவூரில் அமைந்துள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலக சுற்றாடல் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் வகையில்  காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அலுவலக அதிகாரிகள் மீது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டிய உறுதியான காரணங்கள் இருந்த போதும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய கல்வி அலுவலக நடவடிக்கைகள் தவறான முன்னுதாரமாகக் களங்கப்பட்டு விடக் கூடாது என்பதனால் தாம் கல்வித் திணைக்கள பணிப்பாளரையும் அங்குள்ள அலுவலர்களையும் கடுமையாக எச்சரித்ததாக சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்தோடு இணைந்ததாக ஏறாவூர் அல்-ஜுப்ரியா வித்தியாலயம் உள்ளது
மட்டக்களப்பு மத்தி கல்வி அலுவலகமா அல்-ஜுப்ரியா வித்தியாலயமா சுழலை துப்பரவு செய்வது என்பதில் எழுந்த இழுபறி நிலையே டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் சூழலுக்கு வித்திட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .