2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் குற்றச்செயல்கள் குறைவு: வி.முரளிதரன்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்


குற்றச்செயல்கள் குறைந்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது என  மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

'மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு' எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தோர் குற்றச்செயல்களில் ஈடுபடுவது மிகக் குறைவாகும். அண்மையில் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் உள்ள கோவில்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் வட மாகாணத்தை சேர்ந்தவர்களே சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
இந்த  கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை பொலிஸார் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குற்றச்செயல்களை குறைப்பதற்கு விசேடமாக பொலிஸ் கண்காணிப்புக் குழுக்கள் போடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல துறைகளும் பாரிய அபிவிருத்திகளை கண்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 4 வருடங்களில் 54,837.9 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று இந்த ஆண்டும் 9,700 மில்லியன் ரூபா நிதியில் அரசாங்கத்தினால் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

'தேசத்திற்கு மகுடம்' அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவித் திட்டம் என்பவற்றின் மூலமும் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி, விவசாயம் போன்ற பல துறைகளும் பாரியளவு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. தேசிய நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் பாரியளவு பங்களிப்பை செய்து வருகின்றது.

நீர்ப்பாசனக்குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 8 பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் 5 குளங்கள்  அபிவிருத்தி செய்யப்பட்டு நிறைவு பெற்றுள்ளன. அதேபோன்று 16 நீர்ப்பாசனக் குளங்களில் 9 குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அத்தோடு 302 சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் 265 சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாரிய நன்மைகளை அடைந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமான முக்கிய பாலமாக உள்ள மண்முனைப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதுஃ விரைவில் இந்த பால நிர்மாண வேலைகள் முடிவடையும்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டம் இன்று பாரிய அளவில் அபிவிருத்திகளை கண்டு வருகின்றது' என்றார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X