2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கான இரண்டு மாத சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்தே கடதாசி ஆலையில் கடமை புரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் நிருவாகத்திற்கு எதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.கடதாசி ஆலையில் இருந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வரை நிருவாகத்திற்கு எதிராக எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக வருகை தந்தனர்.

இந்த ஆலையில் நிரந்தர ஊழியர்களாக கடமைபுரியும் 165 பேருக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாமலும் தற்காலிக ஊழியர்களாக உள்ள 75 பேருக்கு மூன்று மாதமாகவும் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. கடந்த மாதம் நிருவாத்தைச் சந்தித்த தொழிற் சங்க ஊழியர்கள் தங்களது சம்பள நிலுவையை வழங்குமாறு நிருவாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

இதற்கிணங்க ஓக்டோபர் 15ஆம் திகதி சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தல் பலகையில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி அறிவித்தல் போடப்பட்ட நிலையில் தொழில் சங்கம் ஒன்றினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலையில் ஐந்து தொழிற் சங்கங்கள் உள்ள நிலையில் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் மாத்திரம் சம்பளம் வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளது.

அத்துடன் கடந்த 10ஆம் திகதி தொடக்கம் ஆலையை இயங்க விடாமல் தடுத்து நிறுத்தி உற்பத்தி செய்த பொருட்களை கொழும்புக்கு அனுப்ப விடாமல் தடுப்பதாகவும் நிருவாகத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவிக்கையில்,

"தற்போதுள்ள நிருவாகம் கடதாசி ஆலை நஷ்டத்தில் செல்கின்றது என்று சொல்லிக்கொண்டு ஆலையில் உள்ள வளங்களை திருட்டுத்தனடாக விற்கின்றனர். நாங்கள் சம்பளம் கேட்டால் எங்களுக்கு அடிக்க வருகின்றனர். எங்களை நிருவாகம் மதிப்பதில்லை.எங்களுக்கு சம்பளப் பணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.  அதனால்தான் பொலிஸ் நிலையம் நாடி வந்துள்ளோம்" என்றனர்.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்க தலைவரான எஸ்.எம்.எம்.அமீர் கருத்துத் தெரிவிக்கையில்,

"எங்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நாளை சம்பளம் வழங்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு ஒரு தொழில் சங்கத்தினர் நடந்து கொண்டுள்ளனர். ஆலை நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றது அதனால்தான் சம்பளம் தாமதமாகின்றது" என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X