2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் நகரசபைப் பிரிவில் விசர்நாய் ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் நகரசபைப் பிரிவில் விசர்நாய் ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகங்கள், ஏறாவூர் நகரசபை மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான விலங்கு நல அமைப்பு (Community Protection through Animal Welfare) ஆகியவை இணைந்து இந்த விசர்நாய் ஒழிப்பு வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இலங்கையிலிருந்து 2020 ஆம் ஆண்டளவில் விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழிப்பதற்காக நாய்களினுடைய பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி மலடாக்கும் சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 'தேசிய விசர் நாய்க்கடி ஒழிப்பு' என்ற அடிப்படையில் இது ஏறாவூரில் தொடங்கி நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படுகின்றது என பேராதனை விலங்கு சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர்  ஏ. சிவசோதி (Dr. A. Sivasothy: Director - Animal Health Department) தெரிவித்தார்.

ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானாவின் திட்ட முன்மொழிவுக்கமைய  இது ஒரு தேசியத் திட்டமாக விரிவுபடுத்தப்படும் விதத்தில் முதன்முதலாக ஏறாவூர் நகரசபைப் பிரிவில் அமுலாவதாக சமூகப் பாதுகாப்பிற்கான விலங்கு நல அமைப்பின் செயலாளர் சம்பா பெர்ணான்டோ தெரிவித்தார்.

சுமார் நாற்பதாயிரம் மக்கள் தொகையைக் கொண்டு சன அடர்த்தியோடு காணப்படும் ஏறாவூர் நகரில் பராமரிப்பில்லாத நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இறைச்சிக் கடைகள், மாடறுக்கும் தொழுவம் என்பவனற்றாலும் இன்னபிற பொதுக்கழிவுகளாலும் பராமரிப்பற்ற நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் கழிவகற்றலில் ஏறாவூர் நகரசபை கடுமையான சிரமங்களை எதிர் கொள்ள வேண்டி நேரிடுகின்றது.

இது ஒரு புறமிருக்க பராமரிப்பில்லாத தெரு நாய்களால் மனிதர்களும், வளர்ப்புப் பிராணிகளும் கடித்துக் காயப்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

பல தடவைகளில் விசர்நாய்க்கடிக்கு பலர் ஆளாகியுள்ளார்கள்.

இதனால் உடனடியாக ஏறாவூர் நகரசபைப் பிரிவில் விசர் நாய்களை ஒழிக்க வேண்டியும் தெரு நாய்களின் ,னப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

இன்று ஏறாவூர் ஆற்றங்கரையோரமாக அலைந்து திரியும் தெரு நாய்கள் மயக்க ஊசி ஏற்றப்பட்டு பிடிக்கப்பட்ட பின் மலடாக்கும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த விசர் நாய்க்கடி ஒழிப்புக்காக நாய்களை மலடாக்கும் வேலைத்திட்டம் ஏறாவூர் நகர சபைப் பிரிவில் இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு இடம்பெறும் என்று ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.எம். ஹமீம் தெரிவித்தார்.

இன்றைய வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மற்றும் அமபாறை கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளும் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகளும் சமூகப் பாதுகாப்பிற்கான விலங்கு நல அமைப்பின் பணியாளர்களும் களத்தில் நின்றிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .