2025 மே 02, வெள்ளிக்கிழமை

'அபிவிருத்தியடைந்துவரும் பல்கலையின் சூழலை குழப்பவேண்டாம்'

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

'பல்கலைக்கழக அபிவிருத்திக்கான ஆரோக்கியமான சூழல் கடந்த காலங்களில் எமக்கு இருந்திருக்கவில்லை. தற்போது உருவாகியுள்ளஎல்லா வழிகளிலும் அபிவிருத்தியடையக் கூடிய சூழலைக்குழப்பவேண்டாம்' என சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பில் வெளியாகிவரும் பிழையான தகவல்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'எமது பல்கலைக்கழகம் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய துன்பங்களும், சவால்களும், அபிவிருத்திக்குத் தடையான நிலைமைகளும் எல்லோருக்கும் தெரியும். ஒரு பல்கலைக்கழகம் நாடளாவிய, உலகளாவிய ரீதியில் பேசப்பட வேண்டுமானால் அது பல வகைகளிலும் அபிவிருத்தியடைய வேண்டும். இதற்கான ஆரோக்கியமான சூழல் கடந்த காலங்களில் எமக்கு இருந்திருக்கவில்லை.

இந்நிலை மாறி இன்று எமது பல்கலைக்கழகம் எல்லா வழிகளிலும் அபிவிருத்தியடையக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதன் ஆரம்பமாக எமது பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரது துடிப்பான, திட்டமிட்ட நடவடிக்கைகளும் அவரது கரங்களைப் பலப்படுத்துகின்ற நிர்வாக உத்தியோகத்தர்களது அர்ப்பணிப்புடன் கூடிய சேவையும் அமைகிறது.

ஒரு பல்கலைக்கழகத்தின் மையம் மாணவர்களே. இதனால் அவர்களது கல்வி, வதிவிடம் போன்ற இன்னோரன்ன விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சமகாலச் சவால்களையும் சமாளித்துக் கொண்டு மிக வேகமாக அபிவிருத்தியடைகிறது என்பதையும் நாம் கண்கூடாகக் காணுகின்றோம். ஒவ்வொரு பீடங்களுக்கும் தனித்தனிக் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படுகிறது.

விடுதிக் கட்டிடங்கள், விளையாடுவதற்கான இடங்கள் என்பன அமைக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன. அத்தோடு விரிவுரை மண்டபங்கள், ஆய்வு கூடங்கள் என்பன கட்டப்படுவதோடு பல்கலைக்கழகத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமாகப் பல்கலைக்கழகச் சுற்று மதில் அமைக்கப்படுவதைக் குறிப்பிடலாம். தவிர, தற்காலிக ஊழியர்களாக 15 வருடங்களுக்கு மேலாகத் தொழில் புரிந்தும் நிரந்தர நியமனம் பெறாத இந்தப் பிரதேச ஊழியர்கள் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

உப விடுதிப் பொறுப்பாளர்கள், கணினி பிரயோக உதவியாளர்கள், இலிகிதர்கள், நூலக உதவியாளர்கள், திறன் ஊழியர்கள், சுகாதார சேவை ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இவற்றிற்கும் மேலாகப் பல விரிவுரையாளர்களும்  சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தை அண்மித்த மக்களின் நலன் கருதியே எமது நிர்வாகம் செயற்படுகின்றது.

பயிலுனர்களாகப் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படுபவர்களில் செங்கலடியிலிருந்து சித்தாண்டிக்குள் வசிக்கின்ற பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை பல்கலைக்கழகக் கூட்டுறவுத்துறை சார்பாகக் கடமையாற்றுகின்ற ஊழியர்களில் சுமார் 14 பேருக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு வரலாறு காணாத அபிவிருத்தியை கண்டுகொண்டிருக்கும் எமது பல்கலைக் கழகத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சில முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதையிட்டு பொறுப்புள்ள ஊழியர் சங்கம் என்ற வகையில் கவலையடைகின்றோம். அத்தோடு அநாகரிகமான இத்தகைய செயற்பாடுகளைக் கண்டிக்கின்றோம். 

குறிப்பாக அண்மைக் காலத்தில் முளையெடுத்துள்ள மொட்டைக் கடிதக் கலாசாரத்தை எண்ணி வெட்கமடைகின்றோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .