2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு. மாவட்ட கல்வித்துறை பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது: சீ. யோகேஸ்வரன் எம்.பி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில கல்வி அதிகாரிகள் அரசியல் சார்ந்த நடவடிக்கைளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஆளும் தரப்பு அரசியல்வாதிகளைத் திருப்பதிப்படுத்தும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதால் மாவட்டத்தின் கல்வித்துறை பெரும் சாவாலை எதிர்நோக்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு நேற்றைய தினம் பகல் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்  தொடர்ந்து உரையாற்றுகையில்,

'அரசியல்வாதிகள் சில காலத்தில் மக்களால் நிராகரிக்கப்படலாம் அதிகாரிகளாக இருக்கும் நீங்கள் மேலும் உயர் பதவிகளுக்கு செல்லக்கூடியவர்கள் அரசியலில் மாற்றம் வந்தாலும் அதிகாரிகள் எப்பவும் அதிகாரிகள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. உங்களது கௌரவத்தை  காப்பாற்றும் வண்ணம் உங்கள் கடமைகளை செவ்வனே நிறைவேற்றவேண்டும்.

செங்கலடி மத்திய கல்லூரியைப் பொறுத்தமட்டில் இங்கு அரசியல் தலையீடுகள்  கிடையாது இன்றைய நிகழ்விற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நானும் அழைக்கப்பட்டிருந்தேன். உண்மையிலே பாடசாலைக்கு தேவையான வளங்களைப் பெறுவதற்காக மாத்திரமே அரசியல் வாதிகளை அழைக்க வேண்டும் அவர்களிடம் உரிமையுடன் தேவைகளைக் கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அரசியல் சார்நத செயற்பாடுகளில் கல்வி அதிகாரிகள் ஈடுபட்டு அவர்கைள திருப்திப்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது.

கல்குடா கல்வி வலயத்திலே செங்கலடி மத்திய கல்லூரின் கல்வி அபிவிருத்தியில் சில கண்துடைப்புக்கள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் இவ்விடயமாக வலயக் கல்வித் திணைக்களத்துடன் பேசவுள்ளேன். கல்குடா கல்வி வலயத்தில் சகல பாடசாலைகளையும் பாராபட்சமின்றி நடாத்த வேண்டும். பாடசாலைகள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் உள்ளேன்.

எமது மாவட்டத்தில் தமிழர்கள் சுமார் 74 சதவீதமாக காணப்படுகின்றோம் ஆனால் இந்த மாவட்டத்திலே எமது இனம் சாராதோர் கல்வி வாயப்புக்களை அதிகம் பயன்படுத்தும் நிலமை காணப்படுகிறது அவர்களை நான் குறை கூறவில்லை இந்த நிலை மாற வேண்டும் எமது தமிழ் மாணவர்களுக்கும் சகல வாயப்புக்களும் கிடைக்கவும், பயன்படுத்தவும் ஏற்ற நிலையை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

செங்கலடி மத்திய கல்லூரியைப் பொறுத்தவகையில் கல்குடா வலயத்திலே அதிக வளங்களையும் மாணவர்களையும் கொண்ட பாடசாலையாகக் காணப்படுகிறது. ஆனால் இங்கிருந்து உயர்கல்வியில் பல்கலைக் கழக அனுமதி பெற்று கொள்ளும் மாணவர்களின் தொகை குறைவாகவே காணப்படுகிறது.

இந்த பாடசாலையில் நலன்களில் அக்கறையுடன் செயற்படும் பழைய மாணவர் சங்கத்தினர் எதிர் வருங்காலங்களில் உயர்தர வகுப்பு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இந்த பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகம் தெரிவாகும் மாணவர்களின் தொகையை அதிகரிக்கும் வகையில் உங்கள் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நான் எப்போதும் தயாராகவுள்ளேன்.

இவ்வேளை இந்த பாடசாலையின் நூலகத்திற்கு அவசியமான நூல்களை நான் உடனடியாக பெற்றுத்தருவதற்கு தயாராகவுள்ளேன். மேலும் பாடசாலையில் தளபாடப் பற்றாக்குறை இருப்பதாக அதிபர் கூறினார் உடைந்த நிலையிலுள்ள தளபாடங்களை திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கையெடுப்பேன், அங்கு ஆளணிப் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பாடசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கையெடுப்பேன் என இந்த சந்தர்ப்பத்தில் உறுதியளிக்கிறேன்' என்றார்.

கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் திருமதி.பேரின்பமலர் மோகனராஜா, கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், ஏறாவூர்ப் பற்று 2 கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ.சிவகுரு, பாடசாலையின் முன்னாள் முதல்வர் வ.கந்தசாமி, பொறியியலாளர்களான லெ.மயூரன், ஆ.தர்மசீலன், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது பாடசாலை மட்டத்தில் தமது திறமைகளை வெளிக்காட்டிய 326 மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்தோடு, விஞ்ஞான முன்னேற்றச் சங்க வினாவிடைப் போட்டி, விஞ்ஞான அறிவுப் போட்டி, தமிழ்மொழி தினம், ஆங்கில மொழி தினம் விளையாட்டு போட்டிகளில் மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 23 மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதோடு, 187 புள்ளிகளைப் பெற்ற மாணவன் முருகேசன் ரகுவர்ஷன் அமரர்.சின்னத்தம்பி சம்பந்தமூர்த்தி ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழ்மொழி தினம் பரத நாட்டிய போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்பெற்ற மாணவி கிஷானி சுந்தரலிங்கம் அமரர்.வீ.சிவகுமார் ஞாபகார்த்த விருது, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவன் வன்னியசிங்கம் யசோத்மன் அமரர்.பி.முத்துப்பிள்ளை ஞாபகார்த்த விருது, க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற விஞ்ஞான பிரிவு மாணவன் அமரசிங்கம் துவாரகன் அமரர்.பூ.கிருபாநிதி ஞாபகார்த்த விருது, வர்தகப் பரிவு மாணவி சர்மிலி சிவஞானம் அமரர்.வெ.கண்ணையா ஞாபகார்த்த விருது, கலைப் பிரிவு மாணவி மினுத்ராஜினி கனகசபை அமரர்.சீனித்தம்பி சம்பந்தமூர்த்தி ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு விராங்கனையான கிருஷாயினி புவனேந்திரன் மற்றும் விளையாட்டு விரனான கணேசமூர்த்தி விஜயராஜ் ஆகியோருக்கு அமரர்.ஆ.சீனித்தம்பி போடியார் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டின் சிறந்த மாணவியான லக்ஷனா லோகிதராஜா மற்றும் சிறந்த மாணவனான மகேஸ்வரன் தர்ஷன் ஆகியோர் அமரர்.ஏ.எல்.தங்கமுத்து ஞாபகார்த்த விருது வங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .