2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பிரான்ஸ் அன்னை தெரேசா சமூக நல நற்பணி மன்றத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பிரான்ஸ் அன்னை தெரேசா சமூக நல நற்பணி மன்றத்தின் மூலம் வாகரைப் பிரதேசத்தில் பொது நூலக திறப்பு விழாவும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை அமைப்பு பிரான்ஸ் அன்னை தெரேசா சமூக நல நற்பணி மன்றத்தின் ஊடாக இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

இதன்போது, வாகரை காயான்கேணி கிராமத்திலுள்ள பொதுக்கட்டிடம் ஒன்றில் வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் முகமாக பொதுநூலகம் திறந்து வைக்கப்பட்டதோடு, வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கோழி வளர்ப்பதற்கான உதவிகள் மற்றும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான வறிய மாணவர்களுக்கு பண உதவி என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னை தெரேசா சமூக நல நற்பணி மன்றத்தின் ஆலோசகர் எஸ்.ஜெகநாதன், கிழக்கு இந்து ஒன்றிய பொதுச் செயலாளரும், காந்தி சேவா சங்க செயலாளருமான கதிர் பாரதிதாசன், கல்லடி காயத்திரி பீட பிரதமகுரு சிவயோகச்செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார், காயான்கேணி சரஸ்வதி வித்தியாலய அதிபர் சீ.காளிதாசன் உள்ளிட்டோரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த பெண் தலைமைத்துவ பயனாளிக் குடும்பங்களைச் சேர்ந்த ஐவருக்கு கோழி வளர்ப்புக்கான உதவிகளும் மற்றும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு பண உதவியும் மற்றும் பொதுநூலகத்தில் கடமையாற்றும் ஊழியருக்காக மூன்று மாத சம்பளப் பணம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

பிரான்ஸ்; நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தங்களது உறவுகளின் பிறந்த நாள், திருமண நாள், திருமண நினைவு நாள், பூப்புனித நீராட்டு விழா மற்றும் இறந்த உறவுகளின் நினைவு நாட்களுக்கு செலவிடும் நிதிகளில் ஒரு தொகையை இவ்வமைப்பின் ஊடாக இலங்கையில் துன்புறும் எமது உறவுகளுக்கு வழங்கி வருவதாக அன்னை தெரேசா சமூக நல நற்பணி மன்றத்தின் ஆலோசகர் எஸ்.ஜெகநாதன் தெரிவித்தார்.

இவ்வமைப்பு இன, மத பேதமற்ற முறையில் பல சமூகப் பணிகளை யுத்தத்தாலும், சுனாமியாலும், பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X