.JPG)
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் ஸம்ஸம் மக்கள் எழுச்சிக் கிராமத்திற்கு சகல கட்டமைப்பு வசதிகளையும் உடனடியாகச் செய்து தர பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்தார்.
நேற்று ஞாயிறு (26) மாலை 5.00 மணிக்கு அந்தக் கிராமத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இந்தக் கிராமத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் தான் செய்து தரப் போவதாக வாக்குறுதியளித்ததோடு உடனடியாக வேலைத் திட்டங்களைத் தொடங்குமாறு அதிகாரிகளையும் பணித்தார்.
கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.கே.கே. சிக்கந்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பைஸானே ஸம்ஸம் மஸ்ஜித்துக்கான அடிக்கல்லையும் அமைச்சர் நாட்டி வைத்தார்.
இந்தக் கிராம மக்களுக்கான காணி உரிமைப் பத்திரங்களை உடனடியாக வழங்குமாறு தான் அதிகாரிகளைப் பணித்திருப்பதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு தெரிவித்தார்.
வீதி, மின்சாரம், கிணறு, மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக அமைத்துக் கொடுப்பதற்கு உரிய ஒழுங்குகளைச் செய்யுமாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அதிகாரிகளைப் பணித்தார்.
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்திற்குப் பக்கத்திலுள்ள ஒதுக்குப் புறக் கிராமமான ஸம்ஸம் கிராமத்து மக்கள் பயங்கரவாத வன்செயல்கள் காரணமாக 1996ஆம் ஆண்டு அங்கிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த பின்னர் தற்சமயம் மீள்குடியமர்ந்து வருகின்றார்கள். தற்சமயம் 30 குடும்பங்கள் அங்கு மீள்குடியமர்ந்துள்ளார்கள்.