2025 மே 02, வெள்ளிக்கிழமை

நிர்வாக ரீதியாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்: ரவூப் ஹக்கீம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


நிர்வாக ரீதியாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனரென நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒள்;ளிக்குளம் பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.மதீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16) ஒள்;ளிக்குளம் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் பள்ளிவாசலில் இக்கூட்டம் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இங்கு நிர்வாக ரீதியான மேலாதிக்கத்தினால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அரசாங்க காணியெனக் கூறி அவர்களின் சொந்தக் காணியை ஆட்சி செய்ய முடியாத நிலை அதிகாரிகளால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் நானும் நடவடிக்கை எடுப்பேன்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படல் வேண்டும்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் விகிதாசாரத்தின் படி மத்தியஸ்த சபையில் 8 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், 3 பேருக்கு மாத்திரமே உறுப்பினர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினருக்கு மத்தியஸ்த சபையில் உறுப்பினர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதிலும் இப்பிரதேசங்களில் முஸ்லிம்கள் நிர்வாக ரீதியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள் என என்னிடம் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இதில் அரசியல் தலையீடுகள் எதுவுமில்லை. பிரதேச செயலாளர்களுக்கு இதில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. அவர்களே மத்தியஸ்;தசபை உறுப்பினர்களை தெரிவு செய்கின்றனர்.

தெரிவுசெய்யப்பட வேண்டிய உறுப்பினர்களையும் சில நேரங்களில் அரசியலை காரணம் காட்டி தட்டி விடுகின்றனர். இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளேன்.

கடந்த யுத்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் 23 முஸ்லிம் கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இதில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒள்ளிக்குளம், சிகரம், கீச்சான்பள்ளம், காங்கேயனோடை, பாலமுனை, மண்முனை போன்ற கிராமங்களும் உள்ளடங்குகின்றன.

ஒள்ளிக்குளம் மற்றும் கீச்சான்பள்ளம், சிகரம் போன்ற கிராமங்களில் அடிப்படைத் தேவைகள் மற்றும் நிரந்தர வீட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.  இது தொடர்பாக திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு நானும் அவற்றை உரிய அதிகாரிகளிடத்திலும் வெளிநாட்டு நிறுவனங்களிடத்திலும் ஒப்படைத்துள்ளேன். அந்த உதவிகள் வரும்போது இங்கும் அவ் வேலைத்திட்டங்கள் நடைபெறும்' என்றார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X