2025 மே 02, வெள்ளிக்கிழமை

கடத்தப்பட்ட மாணவி விடுதியிலிருந்து மீட்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் தனியார் வகுப்புக்குசென்று திரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவர் கடத்தப்பட்ட நிலையில், பாசிக்குடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என்று களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த மாணவியை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் மூவரையும் கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில், சிவபுரத்தினை சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் தினமும் முச்சக்கர வண்டியில் தனியார் வகுப்புக்கு சென்றுவந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை வேறு ஒரு முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் வழமையாக வரும் முச்சக்கர வண்டிக்காரருக்கு காயம் காரணமாக வரமுடியவில்லை அதனால் தனது முச்சக்கர வண்டியில் வருமாறு கோரியுள்ளார்.

இந்நிலையில் அம்முச்சக்கரவண்டியில் குறித்த மாணவி பயணித்துள்ளார். மேற்படி முச்சக்கரவண்டிக்கு களுவாஞ்சிகுடி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தபோது மேலும் இரு இளைஞர்கள் அந்த முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளனர். இவ்விருவரும் அம்மாணவியின் வாய் மற்றும் கால்களைக் கட்டி பாசிக்குடா பகுதிக்கு கடத்திச்சென்றுள்ளனர்.

மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததை அடுத்து சந்தேகம் கொண்ட மாணவியின் பெற்றோர், இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாலில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார்,  சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே பாசிக்குடா விடுதியொன்றிலிருந்து கல்குடா பொலிஸாரினால் மேற்படி மாணவி மீட்கப்பட்டுள்ளார். அத்துடன், மாணவியைக் கடத்திச் சென்ற முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட மூவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வரும் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X