2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அநியாயங்களை தட்டிக்கேட்க முடியாமல் உள்ளோம்: சந்திரகாந்தன்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தமிழ் மக்களுக்கு விரக்திகளும் வேதனைகளும் அதிருப்திகளும் இந்த நாட்டில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. கண்முன்னால் நடக்கின்ற அநியாயங்களைக் கூட எம்மால் தட்டிக் கேட்க முடியாமல் உள்ளோம்' என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

படையினருக்கு ஒருவித அதிகாரம், பௌத்த பிக்குகளுக்கு ஒரு அதிகாரம், ஏனைய சிறுபான்மை சமூகத்துக்கு இன்னொரு வகை அதிகாரமென கடைபிடிக்கப்படுமானால் இந்த நாட்டில் ஒற்றுமை சிதைந்து போய்விடுமென்பதை எல்லோரும் உணர  வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த கூட்டத் தொடர் அதன் தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் நடைபெற்ற போது காணி சம்பந்தமான தனிநபர் பிரேரணையில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடந்தும் அங்கு உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாண ஆளுநர் இனவிகிதாசார அடிப்படையில் நியமனங்களை வழங்க வேண்டும் என்ற கொள்கையை கிழக்கு மாகாணத்தில் கடைப்பிடித்து வருகின்றார். தேசிய ரீதியில் இத்தகையதொரு கொள்கை கடைப்பிடிக்கப்படுவதுமில்லை. அரசியல் அமைப்பிலும் அவ்வாறு சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆளுநர் அண்மைக்கால கிழக்கு மாகாண நியமனங்களில் இதை கடைப்பிடித்து வருவது கவலை தருகின்ற விடயமாகும்' என்றார்.

'நிகழ்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு இது நன்மை தருவதாக இருந்தாலும் எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுகளைக் கொண்டுவரும் என்பதை உணர வேண்டும். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவினச் சமூகங்களுக்குமிடையில் இடைவெளி வராமல் சமத்துவமாக இருக்க வேண்டுமென்ற கொள்கையில் நாம் மிக தெளிவாக இருந்திருக்கின்றோம்.

ஆனால் காணி சம்பந்தப்பட்ட விடயங்களில் பல தெளிவில்லாத விடயங்கள் நடந்து கொண்டிருப்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணம் முழுவதும் காணி சம்பந்தப்பட்ட விடயங்களில் ஏற்பட்டிருக்கும் குழப்பநிலை கண்டு கவலைப்பட வேண்டியுள்ளது' என்றார்.

இது விடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியுமோ என்னவோ தெரி-யாது. தெளிவுபடுத்த நான் முயற்சி எடுத்திருக்கின்றேன். தெளிவுபடுத்தியதன் பின்னர் தான் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென எண்ணியிருந்தோம்.

அண்மைக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நியமனங்களைப் பார்க்கின்ற போது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியே நிலவுகிறது. இன விகிதாசார அடிப்படையில் தான் நியமனங்களை வழங்க வேண்டுமென்று ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய ரீதியான கொள்கையாக இது இருக்க முடியாது. இன விகிதாசாரத்தை இன்னமும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் தான் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை யாரும் பார்ப்பதுமில்லை தடுப்பதும் கிடையாது. மட்டக்களப்பில் முன்பு சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

குறித்த பிரதேசத்தில் குடியேறவில்லை. ஆனால் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வெலிகத்தை என்னுமிடத்திலிருந்து சிங்கள மக்களை பிக்கு ஒருவர் கொண்டு வந்து குடியேற்றியுள்ளார். இதற்கு படைவீரர்கள் துணை நிற்கின்றார்கள். சிங்கள மக்களை வேறு மாவட்டத்திலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தி இந்த மாவட்டத்தின் விகிதாசாரத்தை அதிகரிக்கப்பார்க்கிறார்கள்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

'சாதாரண பொதுமக்கள் ஒரு ஏக்கருக்கு மேல் காணிகளை பிடிக்க முடியாது. குடியேற்றப்படுகிறவர்களுக்கு தாராளமாக காணிகள் வழங்கப்படுகின்றன. பெரியளவிலான உற்பத்திகளை செய்யக் கூடிய அளவுக்கு அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதை யாரும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாகவே தமிழ் மக்களுக்கு விரக்திகளும் வேதனைகளும் அதிருப்திகளும் இந்த நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கண் முன்னால் நடக்கின்ற அநியாயங்களைக் கூட எம்மால் தட்டிக் கேட்க முடியாமல் உள்ளது' என்றார்.
மட்டக்களப்பிலுள்ள மக்கள் கொழும்பில் காணி வாங்கிக் குடியேறுகிறார்கள். அதேபோல் அநுராதபுரத்திலுள்ள மக்கள், ஏனைய பிரதேசங்களிலுள்ள மக்கள் காணி வாங்கி குடியேறுகிறார்கள். அது வேறு விடயம். அதேவேளை மட்டக்களப்பிலுள்ள பாமர மக்களை அநுராதபுரத்திலோ கொழும்பிலோ காணியைக் கொடுத்து குடியேற்ற முடியுமா? அதை யாராலுமே செய்ய முடியாது.

ஆனால், கிழக்கில் மிகப் பெரிய முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்ற காணி சம்பந்தமான ஒரு தெளிவில்லாத, யாரும் எதையும் செய்து விட்டு செல்லலாம் என்ற அதிகாரமே வழங்கப்பட்டிருக்கிறது' என சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X