2025 மே 03, சனிக்கிழமை

அழகியல் பாட செய்முறைப் பரீட்சகர் நியமனத்தில் குழறுபடி: ஆசிரியர் சங்கம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சகர் நியமனங்களில் குழறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இலங்கை பரீட்சைத்; திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சகர் சிபாரிசில் சிரேஷ்ட ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயலாளர் பி.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'2013ஆம் ஆண்டு நடைபெற்ற அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சகர் நியமனங்கள் தொடர்பாக மட்டக்களப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பளரினால் இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள சிபாரிசில் சிரேஷ்ட ஆசிரியர்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதோடு பரீட்சை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

நாடகமும் அரங்கியலும் பாடத்துறைக்கு மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆறு செயற்பாட்டு பரீட்சை நிலயங்களுக்கு பிரதான பரீட்சகராக நியமிக்கப்பட்டவர்களில் சிலர் பிரதான பாடமான நாடகமும் அரங்கியலும் நியமனம்  பெறாத ஆசிரியர்கள் இடம்பெற்றிருப்பதோடு குறிக்கப்பட்ட பாடத்துறையின் சிரேஷ்ட பிரதம பரீட்சகர்கள் கனிஷ்ட தர பரீட்சகர்களாக மட்டக்களப்பு கல்வி வலய முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்கள்.

இப்பாடத்துறைக்குரிய உதவிக் கல்விப் பணிப்பாளரின் அசமந்தப் போக்கினை வலயக் கல்விப் பணிப்பாளரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவந்ததன் பின்னர் பரீட்சை திணைக்கள உதவி ஆணையாளரையும் தொடர்பு கொண்டதை அடுத்து விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதி விஷேடமான வர்த்தமானி 1589/30 இலக்கமிடப்பட்ட அத்தியாயம் ix(115) பிரிவின்படி நியமிப்பு செய்யப்படும் பதவியொன்றில் பதில் கடமையாற்றுவதற்கான விதித்துரைக்கப்பட்ட சகல தகைமைகளையும் பூர்த்தி செய்யாத உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் நியமிப்பு செய்யப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் ஆற்றல் பொருத்தம் அனுபவம் தகைமைகள் தகுதிகாண் நிலைமயில் குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு அரசியல் ரீதியாக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் காரணமாக வினைத்திறனற்ற செயற்பாடுகள் நடைபெறுவதால் கல்வி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சேவை மூப்பு, தேர்ச்சி என்பவற்றை கருத்திற்கொள்ளாது மட்டக்களப்பு கல்வி வலயத்தின் அழகியல் துறைக்குரிய உதவிக் கல்விப் பணிப்பாளர் நியாயமான அடிப்படையில் வகைப்படுத்தலென்பது சட்ட ரீதியானதும் தகுதி உடைமையானதுமாகும் என்பதினை மேலான கருத்திற்கொள்ளல் வேண்டும்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X