2025 மே 03, சனிக்கிழமை

தமிழர்கள் புறக்கணிப்பு: நீதிமன்றத்தை நாட நடவடிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 10 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்


கிழக்கு மாகாணசபையில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிகளுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப்பரீட்சைக்கு புறக்கணிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த தமிழ் விண்ணப்பதாரிகளின் நியாயமான நியமனம் தொடர்பில் வெகுவிரைவில் உயர் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

'கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரம் பேணப்படுவதில்லை. தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்' என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2013.11.30ஆம் திகதி கிழக்கு மாகாணசபையினால் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நியமனத்திற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு வராமல் புறக்கணிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட விண்ணப்பதாரிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நல்லையா வீதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 511 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதில் நேர்முகப்பரீட்சைக்காக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் 226 முஸ்லிம்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சிங்களவர்கள் 241 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் திருகோணமலையிலிருந்து மட்டும் 44 தமிழர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையிலேயே நியமனங்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த பதவிக்கு கிழக்கு மாகாணத்தில் தகுதியான சிங்களவர்கள் இல்லை என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்தும் 23 சிங்களவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். நிர்வாக ரீதியாக எங்களுக்கு இதில் நீதி கிடைக்காததால் வெகு விரைவில் இப்பிரச்சினையை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.

இன,விகிதாசார அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுமென விண்ணப்பங்கள் கோரும் போது அறிவிக்கப்படுகின்றது. ஆனால் நியமனங்கள் வழங்கப்படும் போது இனவிகிதாசாரம் பாhக்கப்படுவதில்லை.

தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது இது முதல் முறையல்ல. முகாமைத்துவ உதவியாளர் நியமனம் 162 பேருக்கு அண்மையில் வழங்கப்பட்டது. அதில் 104 முஸ்லிம்களுக்கும் 42 சிங்களவர்களுக்கும் தமிழர்கள் 16 பேருக்கும் ஏனைய இனத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் நியமனம் வழங்கப்பட்டது.

இதில் தமிழர்கள் 16 பேருக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டது'  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இந்த கூட்டத்தில் 120 விண்ணப்பதாரிகள் கலந்துகொண்டதுடன்  அவர்கள் தொடர்பான விபரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் சேகரிக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X