2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

செல்வி சிவக்கொழுந்து பொன்னையாவிற்கு புவியியல் துறையில் கலாநிதிப் பட்டம்

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார், தேவ அச்சுதன்

கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி சிவக்கொழுந்து பொன்னையா 2014ஆம் ஆண்டு 'கடந்த மூன்று தசாப்தங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இடம்பெயர்வும் நிலப்பயன்பாட்டு மாற்றங்களும்' (1981 - 2011) என்ற ஆய்வுக் கட்டுரைக்கு புவியியல் துறையில் கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவரையாளரான இவர், கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் துறை தலைவராகவும் அதனைத் தொடர்ந்து கலை, கலாசார பண்பாட்டுத்துறை பீடாதிபதியாகவும் கடமையாற்றியதுடன் கலாநிதிப் பட்டம் பெற்றமையினைத் தொடர்ந்து மீண்டும் புவியியல் துறைத் தலைவராக நியமனம் பெற்றுள்ளார்.

செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு., திருமதி பொன்னையாவின் கனிஷ்ட புதல்வியான இவர், செட்டிப்பாளையம் மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியினையும் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் உயர் கல்வியினையும் பயின்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டம் பெற்று கற்ற பல்கலைக் கழகத்திலேயே இரண்டு வருடம் (1977, 1978) புவியியல் துறை உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்.

பின்னர் பண்டாரவளை ராஜிக் பரீட் மகாவித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக கடமைப் பொறுப்பை ஏற்ற இவர், பின்னர் தான் உயர் கல்வி கற்ற பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் தொடர்ந்து மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையிலும் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் திறந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரிய கல்வி டிப்ளோமா பரீட்சையில் தோற்றி பட்டம் பெற்றுள்ளார்.

ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது 1993ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புவியியல் துறையினை ஆரம்பிக்க அதற்கான பாடத்திட்டம் தயாரிக்க இப் பல்கலைக் கழகத்தில் நியமனம் பெற்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது இதே பல்கலைக் கழகத்தில் நிரந்தர விரிவுரையாளர் ஆனார்.

2000ஆம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் இரண்டைப் பெற்ற இவர், 2006இல் விரிவுரையாளர் தரம் ஒன்றிற்கு பதவியுயர்வு பெற்றார்.

ஆசிரியராக கடமையாற்றும் காலத்திலேயே புவியியல் துறையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் பட்டத்தினை பெற்றார். தொடர்ந்து விரிவுரையாளராக கடமையாற்றம் போது முதுதத்துவமானி பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட இவர் 2014ஆம் ஆண்டு 'கடந்த மூன்று தசாப்தங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இடம்பெயர்வும் நிலப்பயன்பாட்டு மாற்றங்களும்' (1981-2011) என்ற ஆய்வக் கட்டுரைக்கு புவியியல் துறையில் கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றும் போது தாய்லாந்து, இங்கிலாந்து, நோர்வே, இந்தியா போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு கல்வி மேம்பாட்டின் பொருட்டு பல கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.

செட்டிப்பாளையத்தின் முதலாவது பட்டதாரியான இவர், இரண்டாவது கலாநிதியுமாவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X