2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நாளை ஆரம்பம்

Kanagaraj   / 2014 மார்ச் 18 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்துக்கென நடைபெறும் விசாரணைகளின் முதலாவது அமர்வு இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகிறது.

மட்டக்களப்பில் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் செயற்பட்டதன் அடிப்படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தன.

20ஆம் திகதி முதல் 22ஆம்திகதி வரையில் நடைபெறும் இவ் அமர்வில், 20ஆம் திகதி ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும். 21ஆம்திகதி கோரளைப்பற்று வடக்கு- வாகரை, கோரளைப்பற்று தெற்கு - கிரான் ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான விசாரணைகள் கிரானிலுள்ள றெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அத்துடன், 22ஆம்திகதி மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1100 வரையான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்டளவானவையே விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதே நேரம், குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு யாரும் இல்லை என்ற அடிப்படையில் அவர்களது உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் கூட ஆணைக்குழுவுக்கு முறையிட முடியும்.

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு 1990 - 2009ஆம் ஆண்டு கால அசாதாரண சூழ்நிலையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்து வருகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை தன்னுடைய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள இந்த  இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில்,  தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகமகே, செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச,  பிரியந்தி சுரஞ்சனா வித்தியாரத்ன, மனோ ராமநாதன் ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை நேரடியாக விசாரணை செய்யும் நடவடிக்கைகளே தற்போது நடைபெற்று வருகின்றன. இவை தொடர்பான அறிக்கையை இந்த ஆணைக்குழு ஜனாதிபதியிடம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் சமர்ப்பிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X