2025 மே 07, புதன்கிழமை

சீதனத்தால் பல பெண்கள் முனங்கிக்கொண்டிருக்கின்றனர்: சல்மா ஹம்சா

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சீதனக் கொடுமையால் இன்று பல பெண்கள் வீடுகளினுள் முனங்கிக்கொண்டிருப்பதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் பணிப்பாளரும்; காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான ஜனாபா சல்மா ஹம்சா தெரிவித்தார்.

சீதனத்தால்  சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும்; இதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பிலும் ஆராயும் கலந்துரையாடல் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.

மேற்படி நிறுவனத்தின் காத்தான்குடியிலுள்ள அலுவலகத்தில்  நடைபெற்ற இக்கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இன்று வயது வந்த பல பெண்கள்,  ஆண்கள் கேட்கும் சீதனத்தைக் கொடுக்கமுடியாமல் திருமண வாழ்க்கையின்றி வீடுகளுக்குள் முனங்கிக்கொண்டு வாழ்கின்றனர். இந்த நிலைமை அனைத்து சமயங்களைப் பின்பற்றுகின்ற சமூகங்களிடமும் காணப்படுகின்றன.

வறிய குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த பெண் பிள்ளைகள் பலர் 30 வயது, 35 வயது மற்றும் 40 வயதாகியும் இன்னும் திருமணமாகாமலுள்ளனர். இதற்கு அடிப்படைக் காரணமாக சீதனமே உள்ளது. சில பெண்கள் சீதனக் கொடுமையால் தற்கொலை செய்யும் நிலைமைக்கும் ஆளாகிவிடுகின்றனர்.

சீதனம் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை  ஏற்படுத்தி அனைத்துப் பெண்களும் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சீதனக் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

இங்கு  உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவி பொதுச் செயலாளரும் ஜம் இய்யத்துஸ்ஸபாப் நிறுவனத்தின் பணிப்பாளருமான மௌலவி எம்.எஸ்.எம்.தாஸீம்,

'இன்று எல்லாச் சமூகங்களிலும் சீதனம் என்ற கொடிய நோய் பரவுகின்றது.  பெண் என்பவள் ஒரு தாய். அவள் ஒரு சமூகத்தை உருவாக்குபவள். அனைத்து விதமான துன்பங்களைச் சுமப்பவளும் பெண்ணே. இந்நிலையில் பெண்களிடம் சீதனத்தைப்; பெற்றுக்கொண்டு திருமணம் செய்வதை தவிர்த்து, பெண்களுக்கு திருமணக் கட்டணமாக மஹர் கொடுத்து பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். இதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

இலங்கையில் 61 காதி நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு வரும் திருமண பிணக்குகளில் சீதனம் பற்றி பேசப்படுகின்றன. அவற்றில் பல திருமணங்கள் சீதனத்தினால் விவாகரத்தாகின்றன.

எனவே, சீதனத்துக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும்.  இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில்; அனைத்து மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்.

உலமாக்கள் கதீப்மார் பள்ளிவாசல்களில் ஜும்ஆ பிரசங்கங்களில் சீதனத்தால் ஏற்படும் பாதிப்பு, அதனால் ஏற்படும் சமூகச் சீரழிவுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். இதற்காக ஜம்இய்யத்துஸ்ஸபாப் நிறுவனம் உதவ ஆயத்தமாக உள்ளது. இதற்கான வேலைத்திட்டத்தை தயார்ப்படுத்த வேண்டும்' என்றார்.

இங்கு உரையாற்றிய  காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவரும் முன்னாள் காத்தான்குடி காதி நீதிபதியுமான எம்.ரி.ஹாலித்,

'பெண்கள் தான் இன்று சீதனத்தை ஊக்குவிக்கின்றனர். தனது மகன் வைத்தியராகவோ அல்லது பொறியியலாளராகவோ அல்லது   வெளிநாட்டிலோ இருந்துவிட்டால் மகனுக்கு சீதனம் பேசுகின்றவள் முதலில் தாயாகத்தான் இருக்கின்றாள்.

இது சமூகத்தில் மாற்றப்பட வேண்டும். பெண்கள் ஒன்றுதிரண்டு சீதனத்துக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஒரு ஆண் பெண்ணிடம் சீதனம் பெற்றுக்கொண்டு திருமணம் செய்வதை விட, ஆண் பெண்ணுக்கு பணம் கொடுத்து அவளை திருமணம் செய்ய வேண்டும்.

சமூகத்தில் தாய்மாருக்கு இது தொடர்பில் விழிப்பூட்டல் செய்ய வேண்டும்' என்றார்.

மேலும், ஜம்இய்யத்துஸ்ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையுடன் அனைத்து  மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநதிகள், பிரமுகர்கள் ஆகியோரை உள்ளடக்கி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் நிறுவனத்தினால் ஒரு நாள் செயலமர்வை எதிர்வரும் ஜுன் மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கும் இது தொடர்பான விழிபு;புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானம்; எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாபா சல்மா ஹம்சா தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X