2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

முதலமைச்சர் சி.வி எனக்கு தம்பி: பிள்ளையான்

Kogilavani   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

'வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வயதில் முதிர்ந்தவர். வயதில் அவரைப் பார்த்தால் எனக்கு அண்ணன், முதலமைச்சராக பார்த்தால் அவர் எனக்கு தம்பி. இதனை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை' என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

'விக்னேஸ்வரன் ஒரு சட்ட மேதை. சட்டமா அதிபர் என்று கூறினார்கள். வடமாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் அது கிழக்கு மாகாணசபைக்கு உதவிசெய்யும் நிலை உருவாகும் என நான் கடந்த காலத்தில் கூறியிருந்தேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு எதிராகவே நடைபெறுகின்றது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டிப்பளை பிரதேச சபையின் புதிய கட்டிட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை(01) இடம்பெற்றது.. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மூன்றில் இரண்டு தாருங்கள் சாதித்துக் காட்டுவோம் என வட பகுதி மக்களிடம் கேட்டார்கள். ஆனால் அவர்கள் மூன்றில் இரண்டை விட அதிகமாக வாக்களித்தனர்.

வடமாகாண செயலாளராக இருக்கும் விஜயலட்சுமி  முதலமைச்சருக்கு ஒரு சுற்று நிருபம்  அனுப்பமுடியாதவாறு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது. நீதியரசரான விக்னேஸ்வரனுக்கு அவரின் கத்தியால் அவருக்கே குத்தப்பட்டுள்ளது.

பிரதம செயலாளரின் கடமை தொடர்பில் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. பிரதம செயலாளரை ஜனாதிபதியுடன் பேசி ஒத்திசைவாக நியமிக்க முடியும். இது அரச விதியாகும். அதற்கு எதிராக அவர் செல்லவில்லை. நான் என்றால் விஜயலெட்சுமி அம்மாவை அழைத்து பிரச்சனை தொடர்பாக அரை மணி நேரம் கதைத்திருப்பேன். அப்போது மாகாணம் வேண்டாம் என்று கூறிவிட்டு  சென்று இருப்பார்.

ஒன்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சட்ட மேதை என்றால் அதனை அமுலாக்க வேண்டும்.  பெரும் தேசியவாதிகள் எனும் ஒரு சாரரும் குறும் தேசியவாதிகள் எனும் ஒரு சாரருமே இந்த நாட்டில் சமூக ரீதியாக இன முரண்பாடு ஏற்பட காரணமாக இருந்தவர்கள்.

நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளை தேச நலனோடும், பிராந்திய நலனோடும் தீர்த்துவைப்பதற்காக கொண்டுவரப்பட்ட முறைமை மாகாணசபை முறைமை. இந்த மாகாணசபையை ஏற்காத ஒரு கூட்டத்தினர், எங்களுக்கு ஆதரவு வழங்காத ஒரு கூட்டத்தினர் இன்று எல்லாவற்றையும் குழப்பியுள்ளனர்.

தமிழத்; தேசிய கூட்டமைப்பினர் பல தடவைகள், பல விடயங்களில் தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளனர். இதனை யாரும் மறுக்கமுடியாது. இது பலருக்கு கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.

ஜி.ஜி.பொன்னம்பலம் காங்கிரசில் இருந்தபோது அவர் மலையக மக்களுக்கு எதிராக வாக்களித்தார் என்பதற்காக தந்தை செல்வா வந்தார். தந்தை செல்வா சமஷ்டி அடிப்படையில் தீர்வை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து முதலாவது தேர்தலில் தோல்வி கண்டு அடுத்த தேர்தலில் 1968ஆம் ஆண்டு வெற்றிபெற்றதுடன்  நீலன் திருச்செல்வம் அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக ஆதரவினை வழங்கிவிட்டு 1970 ஆம் ஆண்டுவரை எதுவித சத்தமும் இன்றி இருந்தமையை யாரும் மறுக்கமுடியாது.

1970ஆம் ஆண்டு இவர்களின் பெரும் சிங்கங்கள் எல்லாம் தோல்வி கண்டவுடன்  1971,72ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சிங்கக்கொடியை எரிக்கவேண்டும் என்று இளைஞர்களை ஊக்கவித்து சிங்க கொடியை எரிக்க வைத்தார்கள்.

1965 தொடக்கம் 1970ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். அப்போது எங்கும் சிங்கக்கொடி இறக்கப்படவும் இல்லை. எரிக்கப்படவும் இல்லை.

இவ்வாறு இருக்க சமஷ்டியும் இல்லை, தனிநாட்டு பிரகடனம் வட்டுக்கோடை தீர்மானமும் இல்லை. 1988ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தல் வந்தது. அதனை பொறுப்பேற்கவில்லை. அல்லது அதனை பொறுப்பேற்றவர்களையும் விடவில்லை.

2007ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணசபை தேர்தல் வந்தபோது அதிகாரங்கள் இல்லை. நாங்கள் வரமாட்டோம் என்று கூறினார்கள். அதனை நாங்கள் பொறுப்பேற்று எங்களால் முடிந்தவற்றை செய்துகொண்டிருந்தோம்.

2012ஆம் ஆண்டு அதனை குழப்பிவிட்டு இன்றைய சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்த கிழக்கு மாகாணசபை அமைச்சரவையினை உருவாக்கிக்கொடுத்த பெருமை கிழக்கு மாகாண தமிழ் மக்களையே சாரும்.

அமெரிக்காவின் தீர்மானத்தில் 13வது தீர்வுத்திட்டத்தினை அழியுங்கள் என கூறப்பட்டுள்ளது. இதனை இந்தியா 1987ஆம் ஆண்டே பொலிஸ் தருகின்றோம், நிதி தருகின்றோம், ஹெலியும் தருகின்றோம் என்று கூறியபோது அதனை யாரும் பொறுப்பேற்கவில்லை. இன்று மிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கையெல்லாம் வடபகுதியில் நடந்து வருகின்றன' என தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை பகடைக்காய்

இதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பாதுகாவலனாக காட்டிக்கொள்வதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினை பகடைக்காயாக ஆளுனர் பயன்படுத்துவதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இந்த நிலமையினை மாற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை முன்வரவேண்டும். உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் அடுத்தமுறை வட்டாரமுறை தேர்தலாக அமையும் என நம்புகின்றேன். அந்தவேளையில் பேசிவிட்டு செல்வோரை விடுத்து பேசாமல் பணிகளை செய்வோரை மாத்திரம் தெரிவு செய்யவேண்டும்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கு நூறு வீதம் மாகாணசபை பொறுப்பாகவுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரங்களும் முதலமைச்சருக்கு உள்ளது. அது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் நாங்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதுடன் எமது தனித்துவத்தினையும் பேணி செல்லும்போதே மக்களுக்கு நன்மையான திட்டங்களை மேற்கொள்ள முடியும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X