2025 மே 08, வியாழக்கிழமை

குத்தகை காணியில் ஹோட்டல் அமைக்கப்பட்டதை நிராகரிக்கவும்: யோகேஸ்வரன் எம்.பி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கிராமத்தில் குத்தகைக்கு வழங்கப்பட்ட காணியில் ஹோட்டல் அமைக்கப்பட்டதையும், மக்கள் செல்லும் வீதியை தடுக்க முற்படுவதையும் தடுத்து நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயாங்கேணி கிராமத்தில் கடற்கரையை அண்டிய காணித் துண்டொன்று கடந்த 1942ம் ஆண்டு வாழைச்சேனையைச் சேர்ந்த ஒரு நபருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

உண்மையிலே குத்தகைக்கு வழங்கப்பட்டது அரச காணியாகும். இதனைக் கைமாற்றுவதற்கோ, உறுதி வழங்குவதற்கோ சட்ட ரீதியாக இடமில்லை. ஆகவே இவ்விடயமாக ஆராய்ந்து சட்டப்படி அரசாங்க குத்தகைக் காணியில் ஹோட்டல் அமைத்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு கோருகின்றேன்.

 அத்தோடு இந்த  ஹோட்டல் அமைந்துள்ள காணியின் முன்னால் காயான்கேணியின் முக்கிய வீதி செல்கின்றது. அதற்கு முன்னால் கடற்கரைக்கு ஒதுக்கப்பட்ட காணியும் கடலும் உள்ளது.

சட்டத்துக்கு முரணாக காணிகள் பெற்றுள்ள இந்த ஹோட்டல் உரிமையாளர் கடற்கரை வலய காணியையும் சுவீகரித்துக் கொள்ளும் வகையில் கடற்கரைக்கும் தாம் ஹோட்டல் அமைத்த காணிக்கும் இடையில் செல்லும் காயான்கேணி மக்களின் முக்கிய பாவனைக்குரிய வீதியை அரசியல்வாதிகளினதும், அரச உயர் அதிகாரிகளினதும் செல்வாக்கில் தடைசெய்யவும், புதிய வீதியை வேறுபக்கமாக ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 இச்செயற்பாட்டை ஏற்க முடியாது. எனவே இம்மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் தர்மத்துக்கும், நீதிக்கும் பங்கம் ஏற்படாத வகையில் அரச குத்தகை காணியில் ஹோட்டல் அமைப்பதை தடுத்தும், காயான்கேணி மக்களின் முக்கிய வீதிக்கு தடை ஏற்படுத்துவதை தடுத்தும், ஏனைய நிலங்களையும் சுவீகரிக்க திட்டமிட்ட செயற்பாட்டையும் தடுத்து நிறுத்தி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.
 
அக்கடிதத்தின் பிரதிகள் பொது நிர்வாக அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன, காணி அமைச்சர் ஜனக பன்டார தென்னக்கோன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர், வாகரை பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X