2025 மே 12, திங்கட்கிழமை

அரசாங்கம் தமிழ் மக்களை அழிப்பதற்கு முனைகின்றது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


ஜெனிவாத் தீர்மானத்திற்காக மூவரை சுட வேண்டுமென்று அரசாங்கம் திட்டமிட்டு இருக்கின்றது என்பதனை ஒரு பிரதியமைச்சர் கூறுகின்றார் என்றால் அரசாங்கம் தமிழ் மக்களை அழிப்பதற்கு எவ்வளவு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றது என்பது அந்த பிரதி அமைச்சரின் கூற்றில் இருந்து தெளிவாகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 48 வது வருடாந்த விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை(19) களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

இன்று புனிதமான நாள்


இன்றைய நாள் ஒரு புனிதமான நாள் உங்களுக்கு தெரியும் 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் 27 வது ஆண்டு நிறைவு நாளாகும் அந்த வகையில இன்றைய தினம் ஒரு புனித நாளாகும்.
 
உண்மையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு அன்னை பூபதியவர்கள் மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் இருந்து எதற்காக உயிர் நீத்தார்? அவர் உயிர் நீத்ததன் பலாபலன் எங்களுக்கு கிடைத்ததா? இன்றும் நாங்கள் எவ்வாறு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதனைப் பற்றி சிந்தித்தால் நாங்கள் இன்னும் 27 வருடங்களாக அடிமைப்பட்ட இனங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

இந்த அடிமைப்பட்ட இனமாக இருந்தாலும் கூட மிகவும் உறுதியாகவும், உத்வேகமாகவும் தமிழன் என்ற பெருமையுடனும் தமிழ் தேசியத்தினை கட்டிக் காத்துக் கொண்டு இருக்கின்ற ஊராக இருப்பது களுவாஞ்சிகுடி இதனை எவரும் மறுக்கவும் முடியாது.

நான் 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக இந்த நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் நாடாத்துகின்ற அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்ச்சியாக காலந்து கொண்டிருக்கின்றேன். அதில் தெளிவாக ஒன்றைக் கூறுகின்றேன் அபிவிருத்தியையோ, சலுகைகளையோ, கெஞ்சிக் கேட்காத கிராமமாக களுவாஞ்சிகுடி கிராமம் இருந்து கொண்டு வருகின்றது.

அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டும் அதற்காக எந்த உரிமைகளையும், அபிலாசைகளையும், விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக இருக்கின்ற ஊராகவும், களுவாஞ்சிகுடி கிராமமும் இக் கழகமும் இருக்கின்றது.
இன்று இந் நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற நேரத்திலே அதி உத்தம ஜனாதிபதி அவர்கள் படுவான்கரையில் இருக்கின்ற மண்முனை பாலத்தினை திறந்து வைத்துச் சென்றிருக்கின்றார்.

மண்முனைப் பாலம்

இந்த மண்முனைப் பாலம் என்பது எப்படி வந்ததென்று சிலருக்கு தெரியாமல் இருக்கின்றது. மண்முனை பாலம் கடந்த 2004 ஆண்டு இந்த மண்ணிலே ஏற்பட்ட ஆழிப் பேரலை காரணமாக பல நாடுகள் எமக்கு உதவி புரிந்தன ஐரோப்பிய யூனியன் உதவி செய்தது, ஜப்பான் உதவிசெய்தது, சீனா உதவிசெய்தது.

இந்த செயற்பாடுகளுக்கு அமைவாக ஐரோப்பிய ஒன்றியம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பாலத்தினைக் கட்டித்தந்தது, ஜப்பான் கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடப்பாலம், கல்லடிப்பாலம், கட்டிமுடித்து அடுத்தாக தந்போது மண்முனைப் பாலத்தினைக் கட்டித் தந்திருக்கின்றது. இந்தப் பால விடயத்தில் நன்றி கூறுவதாக இருந்தால் சுனாமியை வரவழைத்த இறைவனுக்கு முதலில் நன்றி கூறவேண்டும். இரண்டாவதாக சுனாமியூடாக நிதியினை ஒதுக்கித்தந்த ஜப்பான் நாட்டுக்கு நன்றி கூறவேண்டும்.

இவ்வாறு எந்தவித அரசியல் செல்வாக்கும் இல்லாமல் அரசியலில் அதிகாரங்கள் இல்லாமல்தான்  இந்த மண்முனைப் பாலம் கிடைத்திருக்கின்றது இது கிடைத்ததன் மூலம் படுவான்கரைக்கு எழுச்சி என்று கூறுகின்றனர்

பாலம் திறந்து விட்டதினால் படுவான்கரையில் எழுச்சி என்று எவரும் கூறமுடியாது.
எழுச்சியாக இருக்கலாம் இருந்தாலும் நிச்சயமாக அதில் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டியும் இருக்கின்றது. அதாவது நில ஆக்கிரமிப்புகள் கலாசாரசீரழிவுகள் போன்றவற்றிக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே பாலம் திறந்து விட்டதினால் படுவான்கரையில் எழுச்சி என்று எவரும் கூறிவிடமுடியாது. அதில் எமக்கு வீழ்ச்சிகளும் உள்ளன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசாங்கதிலே இருக்கின்ற ஒரு பிரதியமைச்சர் கூறியிருந்தார் ஜெனிவா தீர்மானத்திற்கு பிற்பாடு மூன்று பேரை சுடுவார்கள் என்பது தனக்கு தெரியும் என தெளிவாக கூறியிருந்தார்.

அதனை நான் ஊடகங்களில் பார்த்தேன் அவ்வாறாக இருந்தால் ஜெனிவாத் தீர்மானத்திற்காக மூன்று நபர்களை சுட வேண்டுமென்று அரசாங்கம் திட்டமிட்டு இருக்கின்றது. என்பதனை அரசாங்கத்திலே இருக்கின்ற ஒரு பிரதி அமைச்சர் தெளிவாக கூறுகின்றார் என்றால் அரசாங்கம் தமிழ் மக்களை அழிப்பதற்கு எவ்வளவு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றது என்பதை அந்த பிரதி அமைச்சரின் கூற்றில் இருந்து தெரிந்து கொள்ளளாம்.

கூட்டமைப்பினை பலப்படுத்துங்கள்

ஆகவே இவ்வாறான அழிவுகளையும் அட்டூழியங்களையும் நாங்கள் எதிர் நோக்கிக் கொண்டு இழந்த எங்கள் சந்ததியினரின் இழந்த உரிமைகளையும், பெறுகின்ற நேரத்தில்தான் எங்களுக் ஒரு விடுதலை கிடைக்கும் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

களுவாஞ்சிகுடி மண்ணை பொறுத்தளவில் தமிழினத்திற்காக பல தியாங்களை செய்து உயிர் நீத்தவர்கள் அங்கு இருக்கின்றார்கள் அவர்களின் தியாகங்கள் விட்டுச் சென்ற இழப்புக்களை ஈடு செய்ய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும் தாங்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்தால் மட்டும்தான் அடுத்த கட்ட நடவடிக்கையை எங்களால் மேற்கொள்ளமுடியும். இன்று சர்வதேச ரீதியாக எங்கள் பிரச்சினை சென்றிருக்கின்றது. சர்வதேச விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற நேரத்தில் அதனை தடுப்பதற்காக பல நாடகங்களை அரசாங்கம் அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றது.

புலி நாடகம்

விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என்று சொன்னவர்கள் இன்று விடுதலைப் புலிகளை அவர்களே உருவாக்கி நாடகங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த நாடகங்கள் மூலமாக தமிழர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் ஏமாற்ற முடியாது. என்பதனையும் சில வேளை தமிழத்; தேசிய கூட்டமைப்பையும் விசாரணைக்கு எடுத்து அதற்கான தண்டனைகளை வழங்கினாலும் கூட தமிழரின் தாகம், தமிழரின் தேசியம்,  தமிழரின் உரிமை, தமிழருக்கு விடிவுகிடைக்கும்வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்பொழுதும் உழைத்து கொண்டிருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எமக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதியினைக் கொண்டு  சிறுசிறு அபிவிருத்திகளையும்  உங்களுக்கு செய்து வருகின்ற அதேவேளை மேலும் செய்ய இருக்கின்றோம்.

இன்று இந்த விளையாட்டுக் கழகத்தனரால் பலகோரிக்கைகள் எம்மிடம் விடப்பட்டிருக்கின்றன. இந்த விளையாட்டு மைதானம் தேவை என்பதைக் கூறியிருக்கிறார்கள் நிச்சயமாக இந்தமுறை பன்முகப் படுத்தப்பட்ட நிதிதான் இருக்கின்றது. முடிந்தவரை இந்தவிடயத்தை இந்த வருடமே செய்வதற்குஉறுதி கூறுகின்றேன்.

அபிவிருத்திக்கு அமைச்சர்கள் தேவை இல்லை


ஆனால் ஒரு விடயத்தை நான் கூறுகின்றேன் அபிவிருத்திக்கு நன்றி செலுத்த வேண்டாம் அபிலாசைக்கு நன்றிகடன் செலுத்துங்கள் அபிவிருத்தி என்பது எங்கும் இடம் பெறலாம் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறலாம், முல்லைதீவிலும் இடம்பெறலாம், அம்பாந்தோட்டையிலும். ஏன் அம்பிளாந்துறையிலும் இடம்பெறும், இதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது எந்த அரசாங்கம் இருந்தாலும் அபிவிருத்தி இடம் பெற்றுகொண்டே இருக்கும். எனவே சில அமைச்சர்கள் அரசியல் வாதிகள் கூறுகின்றார்கள் அபிவிருத்திக்காக எங்களை நீங்கள் பலப்படுத்தினால் தான், அமைச்சராக இருந்தால் தான் அபிவிருத்தி செய்யமுடியும் என்று கூறுகின்றார்கள்.

அபிவிருத்திக்கு அமைச்சர்கள் தேவை இல்லை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருந்தாலும் சரி அல்லது இன்னுமொரு சாதாரண நபர் இருந்தாலும் சரி வேறு அமைச்சர்களாக இருந்தாலும் சரி அபிவிருத்தியினைச் செய்தே தீரவேண்டும்.

ஒன்றில் மக்களாகிய நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் இந்த களுவாஞ்சிகுடி கிராமத்தை வைத்து ஏனைய கிராமங்கள் முன்நோக்கிச் செல்ல வேண்டும் தமிழ் தேசியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் அதைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

தொடர்ந்து நாங்களும் மக்களாகிய நீங்களும் இணைந்து இழந்த உரிமைகளைப் பெறும் வரை உறுதியாக இருப்போம் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X