2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சுற்றுலாத்துறை எமது வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் அல்ல

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

சுற்றுலாத்துறை என்பது வெளிநாட்டவர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் மாத்திரம் அல்ல. இயற்கையின் அழகை அனுபவிப்பது அனைவருக்குமான உரிமை என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாசிக்குடாவில் நடைபெற்ற கலாசார விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களினால் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இந்நாட்டில் பல வேலைத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது மிக பிரதானமான நோக்கமாக இருந்தது. அந்த அடிப்படையிலே இந்த பாசிக்குடா பகுதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிகப் பிரமாண்டமாக, 2008 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலே ஆரம்பிக்கப்பட்ட பணிகள் முழுமை பெறுவதற்காக மிக மும்முரமாக வேலைப்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

எமது மக்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற இனக்கசப்பான உணர்வுகளையெல்லாம் மறந்து நமது கலை கலாச்சாரங்களை பேணும் விதத்தில் நடந்து பரஸ்பர ஒற்றுமையுடன் வாழ வேண்டும். 

எமது சுற்றுலாத்துறை அபிவிருத்தியைப் பொருத்தவரை சுற்றுலாப் பிரதேசத்தினை சுற்றுலா பயணிகளைக் கவரக் கூடிய விதத்தில் வடிவமைத்துக் கொள்வது இதற்கான வேலைவாய்ப்புகளை தனியார் துறையுடன் சேர்ந்து நாம் எவ்வாறு அபிவிருத்தி செய்து கொள்வது என்பது சம்பந்தமாக நாம் சிந்திக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது 2016 ஆம் ஆண்டு மிகப்பெரிய வருமானம் ஈட்டுகின்ற துறையாக இச் சுற்றுலாத்துறை மாறுகின்ற போது கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதுடன் மேலும் எமது மாகாணத்தினுடைய அழகை மெருகூட்டுவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது.

சுற்றுலாத்துறை என்பது வெளிநாட்டவர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் மாத்திரம் அல்ல. அது கடவுளின் கொடை. இயற்கையின் அழகை அனுபவிப்பது அனைவருக்குமான உரிமை. அனைவரும் நம்பிக்கையுடன் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. இதனை அரசியல் பேதமற்ற முறையில் செய்து கொள்ள வேண்டிய தார்மீகக் கடமை எமக்கு இருதுக்கின்றது.

அந்தவகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வு சிறப்பான முறையில் நிறைவுற்றிருக்கின்றது அந்தவகையில் நாம் திட்டமிட்டிருக்கின்றோம். இந்த பாசிக்குடா பாரம்பரிய கலாச்சார விளையாட்டு ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு எங்களுடைய பாரம்பரியம் கலாச்சாரம் என்பவற்றை வெளிநாட்டவரும் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் எம்மவர்களும் அதில் பங்குதாரர்களாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களும் நாங்களும் எமது கிராம கலை கலாச்சார நிகழ்வில் சந்திக்க கூடியதாக அமைய வேண்டும் அதற்கு இறைவனின் ஆசி கிட்டும் என நான் நினைக்கின்றேன்.

அந்த வகையில் எமது அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாட்டை நாங்கள் இன்னும் முன்நோக்கி நடத்துவதற்கு எமது நிர்வாகமும் எமது மக்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றேன்.

அத்துடன் இந்நிகழ்வினை மிக சிறப்பாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பக்கதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு எதிர்காலத்திலும் எமது சமுக கலை கலாச்சாரத்தினை மீட்டுக் கொண்டு எமது பகுதியை கிழக்கு மாகாணத்தை சுற்றுலா மயமானதொரு பிரதேசமாக மாற்றி எம்மவரையும் அதில் சம்மந்தப்படுத்தக் கூடிய அளவில் எமது பயணம் நீடிப்பதற்கு எமது மக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X