2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு. வைத்தியர்களின் பாகுபாட்டால் நோயாளிகள் உயிரிழக்கின்றனர்: பி.எஸ்.எம்.சாள்ஸ்

Menaka Mookandi   / 2014 மே 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளிகள் மீது வைத்தியர்கள் பாகுபாடு காட்டுவதாகவும் அதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளிடம் வைத்தியர்கள் பாகுபாடு காட்டுவதாகவும் இதனால் நோயாளிகள் சிகிச்சைபெற வழியின்றி இருப்பதாகவும் இவ்வாறான நடவடிக்கை காரணமாக நோயாளிகள் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.

இது குறித்து பொதுமக்களிடமிருந்து எனக்கு பல முறைப்பட்டுக் கடிதங்கள் வந்துள்ளன. இது தொடர்பில், வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்ராகிம் லெப்பையிடம் சுட்டிக்காட்டி எனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த வைத்தியசாலையில் மேலும் பல குறைபாடுகள் நிலவுகின்றன. அண்மையில், நோயாளி ஒருவரின் நோயாளர் அட்டையில் ஒரு மாதம் முந்திய திகதியிடப்பட்டதனால், அந்த நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றம் செய்தபோது அவரை கொழும்பு வைத்தியசாலை பொறுப்பேற்க மறுத்துள்ளது.இதனால் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டது என அவர் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, மட்டக்களப்பு  வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒரு நோயாளி நான்கு ஐந்து மணித்தியாலங்கள் காத்திருக்கவேண்டி ஏற்படுவதாகவும் சில நேரம் அவ்வாறு இருந்தும் மருந்து எடுக்காமல் திரும்பிச் செல்லும் நிலை உள்ளதாகவும் இது குறித்து தனக்கு முறைப்பாடு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வைத்தியசாலையின் கண் வைத்திய வீடுதியிலிருந்து வயோதிபர் ஒருவர் தவறி வீழ்ந்து இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண் வைத்திய விடுதியை கீழ் மாடிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது குறித்த விடுதியின் ஜன்னல்களுக்கு இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவர்  வேண்டுகோள் விடுத்தார்.

இக்குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.எஸ்.இப்ராகிம் லெவ்வை, தான் சிறிது காலத்திலேயே வைத்தியசாலை நிருவாகத்தினைப் பொறுப்பேற்றதாகவும் குறித்த சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .