2025 மே 01, வியாழக்கிழமை

எம்மோடு மு.கா. இணைந்திருந்தால் அரசியலில் மாற்றமேற்பட்டிருக்கும்: மாவை

A.P.Mathan   / 2014 ஜூன் 01 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்,மாணிக்கப்போடி சசிகுமார், எம்.எஸ்.எம்.நூர்தீன்


2010ஆம் அண்டு நடைபெற்ற தேர்தலில் பல காரணங்களினால் வாக்குகள் குறைந்திருந்தன. என்றாலும் கிழக்கிலே நடைபெற்ற தேர்தலிலே எமக்கு இன்னும் ஓர் இடம் கிடைத்திருந்தால் கிழக்கில் நாங்கள் ஆட்சி அமைத்திருக்க முடியும். அல்லது கிழக்கில் எம்மோடு முஸ்லிம் காங்கிரஸ் கைகோர்த்து நின்றிருந்தால் இலங்கை அரசியலிலே ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

'அனைதுலக சமூகமும் தமிழ் தேசிய அரசியலும்' எனும் கருப்பொருளின் கீழ் நேற்று சனிக்கிழமை (31), மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...

1977ஆம் ஆண்டு வடக்கில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் விகிதாசாரத்தைப் பார்க்கின்றபோது சுமார் 87 சதவீதம் வாக்களித்துள்ளார்கள். 

ஆனால், வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில், இராணுவ மயமாக்கப்பட்ட சூழலில் அரசு தேர்தலை நடாத்தியிருந்தது. அதிலும் எமது மக்கள் நிதானமாக வாக்களித்துள்ளார்கள்.

எங்களை நாங்கள் ஆளுகின்ற உரிமை இருக்கின்றது, எமது நிலத்தில் எமது ஆட்சி வேண்டும் என்ற இலட்சியத்திற்காக யாழ். மக்கள் தமது பலத்தினை நிலை நாட்டி இருக்கின்றார்கள்.

வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற பின்னர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றிருந்தால் அவை இன்னும் தாக்கத்தினைச் செலுத்தியிருக்கும்.

இந்த மக்களின் தீர்ப்புத்தான் எம்மை தற்போது சர்வதேச ரீதியில் நிலைக்க வைத்திருக்கின்றது. இவற்றுக்கு என்றென்னும் எமது இனிய தமிழ் மக்களுக்கு நன்றி கூறிக்கொள்கின்றோம்.

அதற்காக எந்த ஒரு நாடும் ஜனநாயகத் தீர்ப்பில் மட்டும்தான் விடுதலை பெற்றுள்ளது என்பதனை நான் கூறிக் கொள்ளவில்லை. பல நாடுகள் ஆயுதம் ஏந்திப் போராடி தமது சுதந்திரத்தினை நிலைநாட்டியுள்ளன. அது இங்கும் நிகழ முடியும் என நாங்கள் நம்பினோம். அந்தப் பலம் எமக்குக் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. ஆனால் அதில் முக்கியமான இராஜதந்திர முறைகளைத் தவறியிருந்தோம். நம்பிக்கைகள் நிறைவேறுவதற்கு இராஜதந்திரமும் தேவை என்பது நியதியாகவுள்ளது.

சர்வதேச நாடுகள் அந்த நாடுகளின் இறைமைகளை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில்தான் அவர்களது தீர்மானங்களை எடுக்கின்றார்கள். மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றபொழுது அதனையும் கடந்து நடவடிக்கைகள் உள்ளன.

தந்தை செல்வாவின் தலைமையிலே 67 வளக்குரைஞர்களுடன் வாதாடி நாங்கள் தெரிவித்துக் கொண்டது என்ன வென்றால், இந்த இறைமை யாரிடம் இருக்கின்றது என்பதுதான் கேள்வி.

இறமை என்பது மனிதனுடைய பிறப்புரிமை, இறமை பற்றி அரசியல், அறிவியல் ரீதியாகப் பார்க்கின்ற பொழுது மக்களிடம்தான் அது இருக்கின்றது என்பதாகும்.

இலங்கையிலே வைக்கப்படுகின்ற வாதமும் சர்வதேச அரங்குகளில் முன்வைக்கப்படுகின்ற வாதங்களும் நாங்கள் இந்த தனி இனத்துவத்தினைக் கொண்டவர்கள், நாங்கள் இந்த நாட்டிலே ஆட்சி செய்தவர்கள் என்பதுதான்.

போரிலே எங்களுடைய சுதந்திரத்தினைப் பறித்தெடுத்த நாடுகள், மீண்டும் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் என்ற பெயரில் உள்ளபோது அந்த சுதந்திரம் எமது மக்களுக்கு திரும்பி விட்டது. என்பதுதான் எமது வாதமாகும்.

இவற்றினைவிட ஜனநாயகத் தத்துவங்களை வைத்துப் பார்த்தால் ஓர் அரசாங்கத்திற்கு இறைமை கிடையாது. மக்கள் தங்களது இறைமைச் சம்மதத்தினைக் கொடுத்தால்தான் அந்த அரசாங்கத்திற்கு அந்த இறைமை போகின்றது. தமிழ் மக்களைப் பெறுத்த வரையில் அரசியல் அமைப்புக்கள் உருவாக்கப்பட்ட எந்தச் சந்தர்ப்பத்திலும். எமது மக்கள் எமக்குத் தந்த இறைமையினை இந்த அதரசாங்கத்துக்கோ வேறு எவருக்குமோ நாங்கள் கொடுக்கவில்லை.

குறிப்பாக தமிழ் மக்களின் இறைமையினை எந்த அரசாங்கத்திற்கோ, அல்லது வேறு எவருக்குமோ நாங்கள் கொடுக்க வில்லை என்பதுதான் உண்மை. ஆனால், இந்த நாட்டுக்கு ஒட்டுமொத்தமாக சர்வதேசத்தின் பார்வை நின்று விடமுடியாது. அதனுள்ளிருக்கின்ற தமிழ் மக்களுக்காக விசேடமாக கவனம் செலுத்த வேண்டும். எமது தத்துவர்த்தம் தமிழ் மக்கள் இந்த அரசுக்கு தங்களுடைய இறைமையினைக் கொடுக்கவில்லை என்பதுதான்.

ஜனநாயகத்தின் அடிப்படையில் எம்மிடம் வந்த சுதந்திரம் திரும்பிவிட்டது. எமதும், எம்முடைய சம்மதம் இல்லாமல் இந்த ஆட்சி நடைபெறுகின்றது என்பதும், அரசியல் அமைப்பு உருவாக்கப் பட்டிருப்பதுவும், அது தமிழ் மக்களின் இறைமையினைப் பாதிக்கின்றது என்பதுதான் எமது கருத்தாகும். 

அடுத்ததாக இந்த அரசாங்கம் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டிருக்கம் தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற கடைப்பாட்டையும் பெறுப்புக்கூறுகின்ற கடைப் பாட்டையும் நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் சர்வதேச ரீதியாக விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்பதாகும்.

2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எங்களை அழைத்திருந்தது. அது ஓர் அருமையான சந்தர்ப்பம். அத்திணைக்களம் எம்முடன் பேசியது. தற்போது தமிழ் தேசியக் கூட்டடமைப்பு சர்வதேச விசாரணையினைக் கோரவில்லை என சிலர் கதைக்கின்றார்கள், ஊடகங்களிலும் தெரிந்தும் தொரியாதவாறு எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அன்று அந்த இராஜாங்கத் திணைக்களத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அரசுக்கு ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என எழுத்து மூலமாக நாம் கோரியுள்ளோம். இதனை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஐ.நா சபையிலுள்ள அங்கம் அந்த அங்கங்களிலுள்ள அங்கத்தவர்கள், பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, மனித உரிமைகள் பேரவை பேன்றவற்றினால்தான் இந்த பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது. இவை தனிப்பட்ட ஓர் அரசியற் கட்சியினால் முடியாது.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையிலும் தருஷ்மன் அறிக்கையினாலும்தான் இந்த நாட்டிலே மூன்றாவது முறையாக இந்த விசாரணை எடுக்கப்பட்டுள்ளது. இறுதியில் 2014.03.14ஆம் திகதி அதிக வாக்குகளால் இலங்கைக்கு சர்வதேச விசாரணை தேவை என நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

நாங்கள் பல விடையங்களை எமது எல்லைக்குட்பட்டு ஆராய்திருக்கின்றோம்.

1983 ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஒரு மிகப்பெரிய கலவரம் இடம்பெற்று எமது மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது எமது தலைவராக அமிர்தலிங்கம் செயற்பட்டு, இவ்விடயங்களை மிகவும் துள்ளியமாக இந்திய அரசுக்கு எடுத்துரைத்தார். அப்போது இந்தியா கூறியிருந்தது, இலங்கையில் மனித அழிப்புக்கள் இடம்பெறுகின்றன என. ஆனால் அக்கூற்று மட்டும் போதாது.

தற்போது அமெரிக்கா, ஐரோப்பா, பிரித்தானியா போன்ற நாடுகள், ஆரதவு தெரிவிக்கின்ற வேளையில் எமது பக்கத்து ஆதாரங்களையும் நியாயங்களையும் திரட்ட வேண்டும்.

நில ஆக்கிரமிப்புக்கள், மனித அழிப்புக்கள் போன்றவற்றோடு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள், பல விடையங்களுக்கு இந்த அரசு பதில் செல்லியே தீரவேண்டும்.

இவைகள் அனைத்தும் ஆவணங்களாக்கப்படல் வேண்டும். இவற்றுக்கான சாட்சியங்களைப் பதிவு செய்யப்பட வேண்டும்.

தற்போது சர்வதேச விசாரணை பற்றியும், ஏனைய பிற விடையங்கள் பற்றியும் பேசகின்றோம். ஆனால் கடந்த காலங்களில் இடம்பெற்ற அழிவுகள், துன்பியல் சம்பவங்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றியெல்லாம் சரியான ஆவணங்களை நாங்கள் பதிவு செய்ய வேண்டும். இல்லா விட்டால் அது எம்மீதுள்ள ஒரு குற்றமாக மாறிவிடும். அந்த வகையில் 11500 சம்பவங்களும் இடங்களும் எம்மிடம் பதிவிலுள்ளன.

காணாமல் போயுள்ளவர்கள் வெளிநாடுகளிலுள்ளதாக அரசாங்கம் சொல்லுகின்றது. இதுபோன்ற கருத்துக்களுக்காக வேண்டித்தான், நாங்கள் சரியான ஆவணங்களையும் தகவல்களையும் பெறவேண்டும். அது எமது பொறுப்பும் கடமையுமாகும்.

தற்போது இரணுவத்தினரால் பறிக்கப்பட்டுள்ள ஆணவங்கள், நிலங்கள், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் விபரங்கள் அனைத்தினையும் பெறவேண்டியுள்ளது. ஆனால் தகவல்கள் அனைத்தும் சரியான முறையில் தயாரிக்கப்படல் வேண்டும். இருந்தும் தகவல்கள் அனைத்தும் உரியமுறையில் எம்மிடம் இல்லை என தற்போதுதான் தெரிகின்றது. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் அதிகம் உள்ளன.

எவ்வளவு நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன, அவற்றினுடைய பெறுமதி என்ன, இவற்றுக்குரிய நட்டஈடு என்ன என்பது பற்றியெல்லம் ஆராய வேண்டியுள்ளது.

இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இன்றும் என்றும் எம்மினத்தின் மீது ஆக்கிரமித்திருப்பதனால் எம்மினம் தொடர்ந்து அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றுக்கும் நாங்கள் தகுந்த அறிக்கைகள் தயாரிக்க வேண்டியுள்ளது.

பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதை மையப்படுத்தி அறிக்கைகள் தயாரிக்கப்படல் வேண்டும்.

சர்வதேச விசாரணை நடக்கும், அவற்றுக்கான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் கொடுக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு. இன்றும் எவ்வளவோ பாரிய பொறுப்புக்கள் எமக்கு இருக்கின்றன.

சர்வதேச மட்டத்தில் எமக்கு வேலை செய்வதற்கு அங்கே ஆட்கள்தேவை. அதேபோல் அதற்கு ஈடாக இந்த ஆவணங்களைத் தயாரிப்பதற்கும் அறிக்கைகளைத் தயார் செய்வதற்கும் இங்கேயும் பொறுப்புமிக்கவர்கள் தேவையாகும்.

இதற்கு எமது கட்சிக்காரர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களின் வீடு விடாகச் சென்று எமது மக்களின் கண்ணீர் கதைகளைப் பெறவேண்டியுள்ளது.

தற்போது எமது குடியுரிமையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. பிள்ளைகள் பிறப்பதில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. வட., கிழக்கில் ஊட்டச்சத்து அற்ற பிள்ளைகளாக பிறகின்றார்கள் என யுனிசெவ் அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. இதிலிருந்து எமது தமிழினம் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதனை அவதானிக்கலாம். எனவே இருக்கின்றவர்கள் எமது இனத்தினை பெருக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலே 16 இலட்சமாக இருக்க வேண்டிய வாக்காளர்களில் 6 இலட்சம்பேரைத் தேடி நிற்கின்றோம். யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வெளிநாடுகளிலுள்ளோர் இங்கு பதியப்பட வேண்டும். மரணச் சான்றிதழ் இல்லாத நிலையில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

இவைகளனைத்திற்கும் எமது அரசியல் தலைவர்கள் முன்னின்று செயற்பட வேண்டும்.

இந்தியாவின் தற்போதைய பிரதமர் மோடி பதவி ஏற்க முன்னர், எமது கருத்துக்களை அவரிடம் தெளிவாக விளக்கிவிட்டோம். அதன் பிற்பாடுதான் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் அருடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம்கூட இந்த 13ஆவது திருத்தச் சட்டம் பிரதிபலித்து நிற்கின்றது என்பதனை நாங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றோம். அதேபோல் இந்த திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வதாக அமையாது என்பதும் பல சந்தர்ப்பத்தில் நீரூபிக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு காணவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. மாநிலத்திற்கு என்ன அதிகாரம், மத்திய அரசுக்கு என்ன அதிகாரம், முஸ்லிங்களும் தமிழர்களுக்கும் என்ன பகிரப்பட வேண்டும் என்றெல்லாம் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை அமுல்படுத்துங்கள் என்றுதான் இந்தியாவும் சொல்கின்றது. இந்த நாட்டிலே இந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் இதற்கு முன்னிருந்த சந்திரிக்காவின் அரசாங்கமும் மழுங்கடித்துள்ளன.

சர்வதேச சந்தர்ப்பங்கள் எப்போதும் நீடித்து நிலைப்பவை அல்ல. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த வேண்டும்.

இறுதியாக, திவிநெகும எனும் மாகாணங்களுக்கு இருக்கின்ற சிறு அதிகாரங்களைப் பறிக்கின்ற சட்டமூலத்தினை நிறைவேற்றினார்கள், இதற்கு தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சிராணி பண்டாரநாயகவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஒரு சிறு அதிகாரங்களைக்கூட தமிழ் மக்களுக்கு கொடுக்க இந்த அரசு விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .