2025 மே 01, வியாழக்கிழமை

சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடியமைக்கு கண்டனம்

Kogilavani   / 2014 ஜூன் 02 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பிரதேச பாடசாலைக்குள் தமிழ் மொழியுடன் தொடர்புடைய நிகழ்வொன்றில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமையை மீறும் செயல்' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

'களுதாவளை மகா வித்தியாலயத்தில்   ஞாயிற்றுக்கிழமை(1)  நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் மொழி தின விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

சில அழுத்தங்கள் வழங்கப்பட்டு இந்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கை அரசியல் யாப்பில் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் தேசிய மொழியாக கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ் மொழி பயன்பாடு அந்ததந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய மொழிகள், ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவநாணயக்கார கூட இந்த கருத்தினை அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

தமிழ் பாட புத்தகங்களில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே உள்ளது. அலுவலகங்களில் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியில் பாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் பிரதேசங்களில் தமிழ் பாடசாலைகளில் சிங்களத்தில்தான் பாடவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. ஆனால் பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்கள் உள்ள கிழக்கு மாகாணத்தில் அதுவும் நூறு வீதம் தமிழ் மாணவர்கள் உள்ள பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ள நிகழ்வானது அனைவரையும் வேதனையடையச்செய்துள்ளது.

தமிழ் மொழிக்கு கௌரவத்தினை வழங்க வேண்டியவர்களே அதனை செய்யாமல் வேறு ஒரு மொழிக்கு வக்காளத்து வாங்கும் நடைமுறையானது உண்மையில் வேதனைக்குரியதாகும்.

கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின நிகழ்வில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளமையானது தமிழ் பேசும் மாணவர்களின் அடிப்படை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும். இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுளளேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .