2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மனக்கஷ்டத்துடன் அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம்: ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 23 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'நாங்கள் மிக வெட்கத்துடனும் மனக்கஷ்டத்துடனும்தான் இந்த அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.  இந்த பட்டம் பதவி, சொகுசு வாழ்க்கைக்காகத்தான் நாம் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறோம் என்று எவராவது  நினைத்தால் அது அவரவர்களின் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது.' 

இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

'ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி உதவி பெறும் 330 வறிய குடும்பங்களுக்கும் 15 பள்ளிவாசல்களுக்கும் ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 30 பேருக்கும் இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அல் அஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. இதில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நாங்களும் ஒரு காலகட்டத்தில் துன்பமான, துயரமான சூழ்நிலையில் வாழ்ந்திருந்தோம். வீடுகளை விட்டு வெளியேறி சொத்துக்களையும் இழந்து அகதிகளாக அச்சத்துடன் இரவு வேளைகளில் பல குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து ஓரிடத்தில் வாழ்ந்தோம்.

அன்று நிம்மதி இழந்திருந்த நாம் இன்று நிம்மதியாக வாழ்கின்றபோது, அன்று நிம்மதியாக வாழ்ந்த வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் இன்று கண்ணீரும் கம்பலையுமாக அச்சத்துடன் தமது நாட்களை கடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

பேருவளை, அளுத்கமை, தர்கா நகர் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக நான் அங்கு சென்று முடிந்தளவுக்கு அவர்களுக்கு உதவி செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

வடக்கு, கிழக்கில் யுத்தம் நடந்தபோது இங்குள்ள மக்கள் பட்ட கஷ்டங்களை அனுபவித்திருக்காத தென்பகுதி மக்கள், சமீபத்தில் நடந்த இந்தக் கலவரத்தின்போது நிறையத் துன்பங்களை அனுபவித்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் முன்னரெல்லாம் எதுவித கஷ்டங்களுமில்லாது வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்த மக்கள். அப்படியிருக்கும்போது திடீரென்று வீடுகளெல்லாம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதும் அவர்கள் துன்பத்தாலும் துயரத்தாலும் துவண்டு போயுள்ளார்கள்.  அவர்கள் நிறைய இழந்திருக்கின்றார்கள். பொருளாதாரம், வியாபார ஸ்தலங்கள்,  வீடுகள்,  பள்ளிவாசல்கள்  சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

04 பேர் கொல்லப்பட்டும் பலர்; காயமடைந்தும்; உள்ளார்கள். என்னுடைய 25 வருடகால அரசியல் வரலாற்றில் நான் வடக்கு, கிழக்குக்கு வெளியே ஒரு சிறுபான்மைச் சமூகத்துக்கு நடந்த ஒரு பேரழிவாக இதைப் பார்க்கிறேன்.

இவ்வாறான  ஆபத்தான சூழ்நிலை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால், இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஒட்டுமொத்த சனத்தொகையில் வெறும் பத்து சத வீதமாகத்தான் வாழ்கின்றார்கள்;.

கிழக்கில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்தாலும் கிழக்குக்கு  வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் நாற்பது, ஐம்பது குடும்பங்கள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வாழ்கின்றார்கள். எனவே, அவர்களது பாதுகாப்பு வாழ்வு இருப்பு என்பது மிக முக்கியமானது.

அதனை அந்தப் பகுதிக்கு வெளியே வாழ்கின்றவர்கள் வெறும் உணர்ச்சிக் கோஷங்கள் கண்டனங்கள், கடையடைப்பு ஆர்ப்பாட்டங்கள், ஆக்ரோஷங்களினூடாக  மாத்திரம்; உறுதிப்படுத்திவிட முடியாது.

எமது நடவடிக்கைகளின் தீவிரத்தால் இன்னும் பல, சிறிய சிறியதாக முஸ்லிம்கள் வாழ்கின்ற கிராமங்கள்  நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
இது விடயமாக நாங்கள் ஏழு முஸ்லிம் அமைச்சர்கள் சனிக்கிழமையன்று சுமார் மூன்று மணிநேரம் ஜனாதிபதியுடன் பதுளையில் வைத்துப் பேசினோம்.

இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் எல்லோரும் எந்தவிதமான வேறுபாடுகளுமில்லாமல் மிக உறுதியாக இருந்தோம். ஜனாதிபதியுடன் வாக்குவாதப்பட்டோம். பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், சிரேஷ்ட அமைச்சர்கள் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

நாங்கள் பேசாமல் அமைதியாகப் பார்வையாளர்களாக இருக்கின்றோம். இன்னும் வெட்கமில்லாமல் இந்த அரசாங்கத்திலே ஒட்டிக்கொண்டிருக்கின்றோம் என்று விமர்சிக்கப்பட்டாலும், நிலைமை அப்படியல்ல. நாங்கள் எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுக்கின்றோம்.

இந்த அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்தால் தனிப்பட்ட முறையில் வசதியாக வாழக்கூடிய பாக்கியத்தை இறைவன் தந்திருக்கின்றான்.
அதுவல்ல முக்கியம். இந்த சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. வெளியேறுவதால் இந்தச் சமூகத்திற்கு எந்த வகையில் பாதுகாப்போ, நன்மையோ கிடைக்கப் போவதில்லை.

அதிகாரத்தில் இருக்கின்ற சக்திகளோடு இணைந்துதான் எங்களுடைய பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு காண வேண்டும்.

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பாதுகாப்பு என்பது வட,கிழக்கை போன்றதல்ல.

அண்மையில் பதுளை, பண்டாரவெல பகுதிகளிலுள்ள முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் நான் ஒரு சந்திப்பை நடத்தினேன். அவர்கள் தாங்கள் முகங்கொடுக்கும் பல்வேறு நெருக்கடிளையும் பிரச்சினைகளையும் பற்றிக் கூறினார்கள். ஆகையினால்,  அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கு  தீர்வு கண்டாக வேண்டும்.

அவர்களது இருப்பு பாதுகாப்பு என்பனவற்றை இந்த நாட்டின் ஜனாதிபதியினூடாகத்தான் நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
வெளியில் இருந்து கொண்டு விமர்சிப்பதன் மூலமோ கூச்சல் போடுவதன் மூலமோ அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுவிட முடியாது.

அதிகாரத் தரப்போடு இருந்து எங்களுடைய சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணவேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.
நாங்கள் பயந்து போய்த்தான் அதிகாரத் தரப்புக்கு முன்னால் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றோம் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.
இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நாம் பயப்படமாட்டோம்.

ஜனாதிபதிக்கோ, அதிகாரமுள்ள அமைச்சர்களுக்கோ, இன்னும் எந்தவொரு சக்திக்குமோ நாங்கள் பயப்பட வேண்டிய தேவையும் இல்லை.
நாங்கள் எங்களது நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லும்போது கடுமையாக வாக்குவாதப்படுகின்றோம், முரண்படுகின்றோம், கண்டிக்கின்றோம்.
இவற்றையெல்லாம் நாங்கள் வெளியில் பிரசித்தப்படுத்திக்கொண்டிருக்க முடியாது.

ஒரு விடயத்தை நாங்கள் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்களுடைய பாதுகாப்பு இருப்பு வாழ்வு சொத்து சுகம் எல்லாமே எம்மைப் படைத்தாளும் வல்ல இறைவனிடமே இருக்கின்றது.

பாதிக்கப்பட்டுப் போயுள்ள அந்த மக்களுக்கு நாம் காட்டுகின்ற உணர்வு ரீதியான எமது ஆதரவு இன்னும் பல கிராமத்து முஸ்லிம் மக்களை அகதிகளாக்குகின்ற நிலைமைக்கு இட்டுச் சென்று விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இன்று அரசாங்கத்தைக் கண்டிப்பதையும் விமர்சிப்பதையும்தான் கூடுதலானவர்கள் விரும்புகின்றார்கள். உணர்சியின் உச்சத்தில் நின்று கொதிப்பது ஒருபோதும் அறிவுடமையாகாது.

அவற்றைச் செய்தால் நாங்களும் ஹீரோவாகலாம். ஆனால், அதனால் சமூகத்துக்கு எந்த நன்மையும் இருக்காது.

இன்று நாங்கள் எங்களுடைய சமூகத்தின் மத்தியில் விமர்சிக்கப்பட்டாலும், எங்களைத் தூற்றினாலும் நாங்கள் பாதிக்கப்பட்ட இந்த சிறுபான்மைச் சமூகங்களுக்காக மிகக் கவனமாகக் காய் நகர்த்துகின்றோம்.

இன்று இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு பல்வேறுபட்ட சக்திகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த விடயத்தில் நாங்கள் நின்று நிதானித்துச் செயற்பட வேண்டும்' என்றார்.

  Comments - 0

  • M.A.A.Rasheed Monday, 23 June 2014 02:16 PM

    ஏன் நீங்கள் அரசுடன் இருக்கிறீர்கள். முதலைக் கண்ணீரா? பதவியை துறவுங்கள்... அது முடியாதே....

    Reply : 0       0

    Kulanthaivel Monday, 23 June 2014 10:35 PM

    நீங்கள் ஒரு சிறு குழுக்களாக மஹிந்த சிந்தனையில் ஆழ்ந்து உறங்குவது எங்களுக்கு புரிகின்றது. பொலிஸ் பாதுகாவல், மாத படிமுறைகள், இரண்டாம் சம்பளம், வெளி நாட்டு பயணங்கள், சொந்த குழந்தைகளுக்கு சகல வசதிகள்; இதெல்லாம் எப்படி உதறி எறிய தோணும்? அடுத்த தெரிவில் மக்கள் உங்களை உதறி விடுவார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X