2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் திருப்தி: வண்டபர்பேர்க்

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐரோப்பிய யூனியனால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் நாம் திருப்தியடைகிறோம் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதியும்,  செயலாற்றுகைப் பிரிவுத் தலைவருமான வில்லி வண்டபர்பேர்க் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய யூனியனின் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், ஐரோப்பிய யூனியனின் திட்ட முகாமையாளர் செமியொன் புறோரினி; கலந்து கொண்டார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐரோபபிய யூனியனின் நிதியில் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும்யுனிசெப், அக்ரட், சோஆ, ஐக்கிய நாடுகளின் ஹபிராட் நிறுவனங்களின் பிரதி நிதிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் முகவர் அமைப்புக்கள் தங்களது செயற்பாட்டு அறிக்கைகளை முன்வைத்தனர். அதனையடுத்து தேவைகள் மற்றும் பிரச்சினைகள், எதிர்காலத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுனாமிக்குப்பின்னர் ஐரோப்பிய யூனியனால் ரூபாய் 7.5 பில்லியன் உதவு தொகையாகச் செலவிடப்பட்டுள்ளது. இது 4.2 மில்லியன் யூரோவாகும்.
இந்த நிதி, ஐரோப்பிய யூனியனால் சுனாமி, யுத்தத்திற்குப்பின், நடைமுறைப்படுத்தப்பட்ட உட்கட்டுமான, வீடமைப்பு உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்காகவும் செலவு செய்யப்பட்டுள்ளன. இந்நிதி  நன்கொடையாகவே வழங்கப்பட்டுள்ளது.

திட்டங்களின் பௌதீக, நிதி முன்னேற்றங்கள் தொடர்பில் திருப்தியடைகிறோம் என்றும், ஆனால் திட்டங்களை நடைமுறைப்படுத்திய நிறுவனங்கள் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தகவல் திரட்டுவதில் குறைபாடுகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் இவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

யுத்தம் நடைபெற்ற காலத்திலும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும், சுனாமிக்குப் பின்னரும் எனப் பல தடவைகளில் ஐரோப்பிய யூனியனால் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றினை இங்குள்ள முகவர் அமைப்புக்கள் நடைமுறைப்படுத்துகின்றன. 

இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அவற்றினால் கிடைத்த பலன், முன்னேற்றம், தற்போதுள்ள நிலைமைகள் குறித்து சரியான புள்ளி விபரங்களுடனான அறிக்கைப்படுத்தல் போதாமல் இருக்கிறது.

இதுவரை பல திட்டங்கள் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது மாவட்டங்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களாகும். இதில் வடக்கில் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களும் கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டங்களின் தேவைகளின் அடிப்படையிலேயே இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவடடத்தின் 2018ஆம் ஆண்டு வரைக்குமான மாவட்ட அபிவிருத்தித்திட்டம் தயாரிக்கப்பட்டள்ளது. இது ஒரு பாராட்டுதலுக்குரிய விடயமாகும். இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டங்கள் இருக்குமாக இருந்தால் அபிவிருத்தி மற்றும் நடவடிக்கைகளுக்காக இது ஒரு மூல ஆவணமாகவும், கொiடையாளிகள் நாடுகளுக்கு உதவியாகவும். இலகுவாகவும் இருக்கும் எனத் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தித்திட்டத்தினை அரசாங்க அதிபர் தயாரித்துள்ளமைக்கு வாழ்த்தினைத் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X