2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மீனவர்கள் இருவரை காணவில்லையென முறைப்பாடு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 23 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம், க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையிலிருந்து  ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக படகொன்றில்  சென்ற 03 பேரில் இருவர் காணாமல் போயுள்ளதாக  அப்படகு உரிமையாளர் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், எஞ்சிய ஒருவர் படகுடன் கரைக்கு திரும்பியதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

காவத்தமுனை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான யூசுப்லெப்பை தாஹிர் (வயது  38), வாழைச்சேனை மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முஹமட் பௌசுதீன் அறபாத் (வயது 20) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, இப்படகுடன் திரும்பிய நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நேற்றையதினம் (22) மதியம் இப்படகில் சென்ற தாங்கள் மூவரும்  மதுபானம்  அருந்தியதாகவும்  இதன்போது, காணாமல் போனதாகக் கூறப்படும் இருவரும்  சண்டையிட்டனர்.  சண்டையிட்ட இருவரையும் தான் சமாதானப்படுத்திவிட்டு  உறங்கியதாகவும் சிறிது நேரத்தில்  கண் விழித்துப் பார்த்தபோது, காணாமல் போன இருவரில் ஒருவர் வேறொரு  படகில் ஏறிச் செல்வதைக் தான் கண்டதாகவும் ஆழ்கடலிலிருந்து கரைக்கு வந்த மற்றுமொரு படகின் உதவியுடன் தங்களது  படகை தான் கரைக்கு கொண்டுவந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் பொலிஸாருக்கு அளித்த   வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

குறித்த படகில் இரத்தக்கறை  படிந்து  கிடப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

இதற்கிடையில், காணாமல் போன இருவர் தொடர்பிலும் அவர்களது உறவினர்களும் வாழைச்சேனை பொலிஸில்  முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார்  விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0

  • வை.எல்.மன்சூர் Wednesday, 23 July 2014 06:37 AM

    இறைவன் துணை, முயற்சி செய்யுங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X