2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி பிரேரணை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளினால் அழிக்கப்பட்ட விவசாயப் பயிர்களுக்கு கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் ஊடாக 20,000  ரூபாய் நஷ்டஈட்டை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரும் தனிநபர் பிரேரணையை  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்தார்.

அந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த 03 வருடகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் காட்டு யானைகளினால் 300 இற்கும் மேற்பட்ட விவசாயிகளின்  பயிர்ச் செய்கைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

பல வருடங்களாகியும் மத்திய அரசாலும் மாகாண அரசாலும் வழங்கப்படவேண்டிய விவசாயப் பாதிப்புக்கான  நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை. ஏனோதானோ என இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது.

கடந்த காலத்தில் மாகாணசபையால் உரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டும்  03 வருடங்களாகியும் இன்னும் ஒருவருக்குக் கூட விவசாய நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

எல்லைக் கிராமங்களிலுள்ள விவசாயச் செய்கையாளர்களின் பயன்தரு மரங்களான தென்னை, மா, வாழை, பலா, பப்பாசி, கரும்பு, மரக்கறி வகைகள், தானிய வகைகள் என அனைத்தும் அழிந்து  உள்ளதால் பல விவசாயிகள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டும் சில விவசாயிகள் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

பல இலட்சக்கணக்கான பெறுமதி வாய்ந்த விவசாயப் பயிர்கள் அழிக்கப்பட்டு, 03 வருடங்களாக எந்தவொரு நஷ்டஈடு பெறாமல் இருப்பவர்களை இனங்கண்டு கிழக்கு மாகாணசபையின் கீழுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தால் விவசாயப் பாதிப்புக்கு வழங்கப்படுகின்ற 20,000 ரூபாய் நிதியையாவது துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பல வருடங்களாக பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித நஷ்டஈடும் பெறாமல் உயிர் ஆபத்துக்கு  பயந்து ஊண், உறக்கமின்றி வறுமை போன்றவற்றால் இடம்பெயர்ந்து விரக்தி நிலையிலிருக்கும் இவர்களிடம் பொலிஸ் முறைப்பாடு போன்றவற்றைக் கேட்பதும் அழிக்கப்பட்ட பயிர்களின் தடயம் இல்லாமல் இருப்பவர்களிடம் அதிகமான கேள்விகளைக் கேட்டு இன்னும் விரக்தி நிலைக்குத் தள்ளாமல் கிராம சேவையாளர், சமூக சேவைகள் உத்தியோகஸ்தர், சமுர்த்தி உத்தியோகஸ்தர், கிராமத்திலுள்ள அமைப்புக்களின் ஆலோசனையின் பேரில் உடனடியாகவும் விரைவாகவும் மாகாணசபையில் விசேட குழுக்களை அமைத்து நிதியை நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் கைகளுக்கு கிடைக்க இப்பிரேரணையை வழிமொழியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X