2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'தேர்தல் காலத்திலேயே தமிழ் அரசியல்வாதிகள் வீடுகளுக்கு வருகின்றனர்'

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


உணர்வையூட்டும் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மட்டுமே வீடுகளுக்கு வருகின்றனர். பின்னர் அவர்கள் மாயமாய் மறைந்துவிடுகின்றனர் என கல்குடாத்தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

இவர்கள் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகின்றனர். நீங்கள் ஏமாளிகளாகவே இருந்து வருகின்றீர்கள் எனவும் அவர் கூறினார்.

ஏறாவூர், தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 900 பேருக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தமைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவ அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு அந்தக் கிராமத்தில் நேற்று  சனிக்கிழமை (06) மாலை நடைபெற்றது.  இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்;.

இதன்போது,  தளவாய்க் கிராமத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளையும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'அரசாங்கமானது இலவசக் கல்வி, பாடசாலைப் பிள்ளைகளுக்கு சீருடை, மதிய உணவு, கொப்பி புத்தகங்கள் என்று வழங்குகின்றன.  சமுர்;த்தி இலவசமாக கிடைக்கின்றது. சுகாதார சேவைகள் இலவசம், பொதுசன உதவிப் பணம் இலவசம், நிவாரணம், வீட்டுத்திட்டங்கள், பாதைகள் மற்றும் பாலங்கள் இப்படி எல்லாமே அரசாங்கத்திடமிருந்து இலவசமாகக் கிடைக்கின்றபோது, நாம் அவற்றைச் சிந்திக்காமல் அரசாங்கத்துக்கு எதிராகவே வாக்களித்துப் பழக்கப்பட்டுவிட்டோம். சமுர்த்திப் பயனாளிகள் மரணித்தால் கூட அரசு 10,000 ரூபாய் தருகிறது.

நீங்கள் உங்களுக்காகவே பணி செய்யக்கூடிய, மக்களோடு மக்களாகவே வாழ்கின்ற ஒருவரை உங்களது வாக்குகள் மூலம் தெரிவுசெய்தால் உங்கள் பிரதேசம் அபிவிருத்திடையவதோடு, உங்களது பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.

தமிழ்ச் சமூகம் இன்னமும் அரசியல் அபிவிருத்தி காணவில்லை. அவர்கள் இன்னமும் பூச்சியத்திலேயே  இருந்துகொண்டிருக்கின்றனர். இதனாலேயே  காலாகாலமாக உங்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அரசியலின் பெறுமதியையும் உங்களின் வாக்குப் பலத்தையும் அதனால் சாதிக்கக் கூடியவைகளையும் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த 66 வருடகாலமாக தமிழர் கூட்டணிக்கு வாக்குப் போட்டதாலான பயன் ஒன்றுமில்லை. நீங்கள் ஓட்டாண்டியாகிப்போனதே மிச்சம். ஆனால், நீங்கள் வாக்களித்த தமிழர் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்கவைத்து குடும்பங்களுடன் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.  நீங்கள் வாக்களித்த பல தமிழ்க் கூட்டமைப்பு அரசியல்வாதிகள், இப்பொழுது வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

எமது எதிர்கால இளம் சமுதாயத்தை நிம்மதியாக வாழவைக்கக்கூடிய சரியான அரசியல் தலைமைத்துவங்களை நீங்கள் தெரிவுசெய்ய வேண்டும். நீங்கள் வாக்களித்தவர்கள் தேர்தல் காலத்தில் மாத்திரமே உங்கள் காலடிக்கு வந்து பசப்பு வார்த்தைகளைக் கூறி உங்களை ஏமாற்றிவிட்டுச் செல்வார்கள். ஆனால், அதற்குப் பிறகு வரமாட்டார்கள்.

ஆனால், நாங்கள் அப்படியல்ல. நீங்கள் வாக்குப் போட்டாலும் போடாவிட்டாலும் காலமெல்லாம் உங்களுக்காகவே சேவை செய்துகொண்டிருக்கின்றோம்.  உங்களது காலடிக்கு அடிக்கடி வந்து உங்களது குறைநிறைகள், தேவைகள், பிரச்சினைகள் பற்றி கேட்கின்றோம். உங்களுக்கு உதவுகின்றோம். இது பற்றி நீங்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தை உங்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டமுடையதாக மாற்றாமல் உங்களுக்கு நலமும் வளமும் தரக்கூடியதாக மாற்ற முயற்சியுங்கள்.

மக்களைக் காட்டி, அவர்களை ஏமாற்றி மக்களது வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கு பெயர் சமூக உணர்வல்ல. இது அரசியல் கொள்ளை. இதைத்தான் தமிழ் அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள். இன்னமும் யுத்தம் தொடர்ந்து நடந்திருந்தால் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் நான் உட்பட இரண்டரை இலட்சம் பேர் செத்து மடிந்திருப்பார்கள்.

கருணா அம்மான் இல்லாவிட்டால் தற்சமயம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு கதியும் இல்லை. அவர் மூலமாகக் கிடைத்த 300 மில்லியன் ரூபாய் நிதியைக் கொண்டே  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏழைகளுக்கான வாழ்வாதாரத் திட்டத்துக்கு உதவிக்கொண்டிருக்கின்றோம்.
உங்களது பிரச்சினைகளை ஜனாதிபதிவரை கொண்டுசென்று தன்னாலான முழு உதவிளையும் செய்து முடிப்பதற்கு கருணா அம்மான் (பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்) முழுமூச்சாகப் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்.

நாங்கள் ஒருபோதும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றவில்லை. சொன்னதைச் செய்கின்றோம். செய்யக் கூடியதைச் சொல்கின்றோம். இந்த விடயத்தில் நீங்கள் நடுநிலையாகச் சிந்தித்து நன்றியுணர்வோடு நடந்துகொள்ளுங்கள்.' என்றார்




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X