2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மந்திக் கூட்டத்துக்கு இடமில்லை'

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கொப்பு விட்டு கொப்புத் தாவும் மந்திக் கூட்டத்துக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இடமில்லையென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்டலடி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைத்துக்கொடுத்த மாகாணசபை அரசியல் அதிகாரப்பரவலாக்கல் பாதையிலேயே தமிழருக்கான மூத்த கட்சியென பெருமை பேசும் கட்சிகளும் பயணிக்கின்றன.

அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் வழிகாட்டியான எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மரம் விட்டு மரம் தாவும் மந்திக் குணமுடைய கொள்கை இல்லாத அரசியல்வாதிகளுக்கு தன்னகத்தே ஒருபோதும் இடமளிக்காது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து முன்னாள் தவிசாளர் வேறு கட்சிக்குத் தாவினார், கட்சியின் பிரதிச் செயலாளர் வேறு கட்சிக்கு மாறினார்; என்ற செய்திகள் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளியாகின.  இது குறித்து மக்களும் கட்சியின் ஆதரவாளர்களும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பரம்பரை அரசியல் பின்புலத்துடன்  போலி அரசியல் செய்ய முனைந்த கட்சியல்ல.  மக்களுக்காக தம் உயிரை தியாகம் செய்யத் துணிந்த இளைஞர்களைக் கொண்டு சிறப்பான தியாக சிந்தையுடைய  தலைவர் எஸ்.சந்திரகாந்தனால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி.

ஏனைய கட்சிகளிலிருந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு துரத்தப்பட்ட சுயநலம் கொண்ட அரசியல் தலைவர்களைக்கொண்ட கட்சியல்ல என்பதை எல்லோரும் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு எதிராக சுயநல சிந்தனையுடன் செயற்பட விளையும் எவருக்கும் எமது கட்சியில் இடமளிக்கப்பட மாட்டாது. கடந்த காலத்தில் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மூலம் சமூக அடையாளம் வழங்கப்பட்ட சிலர் தமது குறுகிய அரசியல் இலாபம் தேட முற்பட்ட வேளையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.  அவர்களில் சிலர் தமிழரசுக் கட்சிக்குச் சென்றார்கள். இன்று அதேபோன்று ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சென்றுள்ளனர்;.

மக்களுக்குச் சேவை செய்யும் உயரிய சிந்தனையுடன்  கொள்கை விளங்கிக்கொண்டவர்கள் இறுதிவரை மக்களை நோக்கிப் பயணிப்பர். 
ஆனால், முதலமைச்சர் அதிகாரம் உள்ளபோது தமிழ் மக்கள் விடுதலைப்; புலிகள் கட்சியுடன் ஒட்டியிருந்தால் ஏதாவது தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றலாமென்று  முன்வருபவர்களுக்கும் தவிசாளர் அதிகாரம் உள்ளபோது மக்களை ஏய்க்கலாமென்று முனைபவர்களுக்கும் கட்சி ஒருபோதும் களம் ஏற்படுத்திக்கொடுக்காது.

தமக்கு வாசியான கட்சிக்கு தாவுகின்றவர்களை நாம் ஒன்றும் செய்யமுடியாது. அது பற்றி சுயநல அரசியல்வாதிகளை தன்னகத்தே இணைத்துக்கொள்ளும் ஏனைய கட்சிகளும் மக்களுமே சிந்திக்க வேண்டும்' என்றார்.

கண்டலடி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் தலைவர் எஸ்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்   ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான எஸ்.சந்திரகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பி.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X