2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஆசிரியர்களை கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதற்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் ஆசிரியர்களை தமது சங்கத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதாகவும் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்  கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா இன்று வியாழக்கிழமை (09) வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் சங்கத்தில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்கோ அல்லது அதை  வறிதாக்கிக்கொள்வதற்கோ தொழிற்சங்கச் சட்டத்தில் இடமுண்டு.

அதேபோன்று, ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கமும் சேரவிரும்பும் ஆசிரியர்களை அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்வதற்கும் தொழிற்சங்கச் சட்டத்தில் இடமுண்டு.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்களின் விருப்பு, வெறுப்புக்களை அறியாமல் சகல பாடசாலைகளிலும் சேவையாற்றும்; ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலையும் கணினி இலக்கத்துடன் பதிவுசெய்து, நீங்கள் அனைவரும் எமது சங்கத்தின் அங்கத்தவர்களென மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் எனக் குறிப்பிட்டு பதிவுத்தபால் மூலம் அறிவித்துள்ளனர்.

இச்செயற்பாடு, தொழிற்சங்கச் சட்டத்தை மட்டுமல்ல, ஆசிரியர்களின் உரிமைகளை மதிக்கத் தவறும் செயற்பாடாகவும் எமது  கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம்  கருதுகின்றது.

அத்தோடு, கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றது.

மேலும், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு மாறாக, கட்டாய ஆட்சேர்ப்பு சம்பந்தமாக மூதூர் மற்றும் திருகோணமலை வலயங்களிலிருந்து அதிபர்கள், ஆசிரியர்களின் பல முறைப்பாடுகள், எமது கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், உத்தியோகபூர்வமாக உறுப்புரிமை பெறுவதற்கு முன்னர், ஒரு ஆசிரியரின் பெயர் மற்றும் கணினி இலக்கம் வழங்கியது யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்விடயம் சம்பந்தமாக பாடசாலை அதிபர்களிடம் தொடர்புகொண்டு வினவியபோது, இவ்வாறு அனுப்பப்பட்ட பெயர்பட்டியலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் தங்களது பாடசாலைக்கு பதிவுத்தபால் மூலமே அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.

அப்படியாயின் வலயக்கல்வித் திணைக்களமே அவர்களுக்கு ஆசிரியர்களின் விவரங்களை வழங்கியிருக்கவேண்டும். அவ்வாறு வலயக் கல்வித் திணைக்களம் வழங்கியிருந்தால், இச்செயற்பாடு சட்டத்துக்கு முரணானது மட்டுமல்ல, அதிபர்கள், ஆசிரியர்களின் உரிமை மீறலாகவே கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம்  கருதுகின்றது.

எனவே ஆசிரியர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களின் தகவல்களை மற்றும் சம்பளப்பட்டியல் விவரங்களை வழங்கியது சம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த விடயத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X