2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வேறொருவர் நாட்டு ஜனாதிபதியாக வந்தால், தமிழ் மக்கள் மீண்டும் காட்டுக்குள் ஓடவேண்டும்: சந்திரபால

Gavitha   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


அரசாங்கத்தை நேசிக்கும் மக்கள், அரசு அமுல்படுத்தும் அபிவிருத்தி நன்மைகளையும் துரிதமாக அடைந்து கொள்வார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர்த்து வேறொரு தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக வந்தால், மீண்டும் அப்பாவித் தமிழ் மக்கள் காட்டுக்குள்தான் ஓடவேண்டியிருக்கும் என மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதி அமைப்பாளர் டி.எம். சந்திரபால தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, ஊத்துச்சேனை கிராமத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளை ஸ்தாபிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (18) நடைபெற்றது.

இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துக்கு நீங்கள் ஆதரவளிக்காத போதிலும் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் பல நன்மைகளை அனுபவிக்கின்றீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி, கொங்கிரீட் இடப்பட்ட வீதியில் போக்குவரத்து, வீட்டு வசதி, சமூர்த்திக் கொடுப்பனவு, பொதுசன மாதாந்த உதவித் தொகை, வாழ்வாதாரக் கொடுப்பனவுகள், வரட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், இழப்பீடுகள், வீடமைப்புத் திட்டம் இப்படி இன்னும் எத்தனையோ வகையான நன்மைகளை, அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

அப்படி இவற்றையெல்லாம் அனுபவித்து விட்டு தேர்தல் வந்தால், அந்த வேளையில் மாத்திரம் உங்களிடம் ஓடி வந்து உணர்ச்சியூட்டுபவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கின்றீர்கள்.

இப்படியே 60 வருடங்களுக்கு மேலாகப் பழகி விட்டோம். இப்படி எதிர் நிலைப்பாடு எடுப்பதில் என்ன சுகம் கண்டோம்.?
தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு எடுத்துச் சென்று அதன் மூலமாகத் தீர்வு காணக்கூடிய ஒரு தலைவரை இன்னமும் நீங்கள் தெரிவு செய்து அனுப்பவில்லை.

ஆனாலும், அரசாங்கம் தமிழ் மக்களைக் கைவிடவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காக, அரசாங்கம் கருணா அம்மானை பிரதியமைச்சராக நியமித்திருக்கின்றது.

அவரை நீங்கள் உங்களுக்காகத் தெரிவு செய்யாவிட்டாலும் அரசாங்கம் உங்களைக் கைவிடக் கூடாது என்பதற்காக, அவ்வாறு அவரைத் தெரிவு செய்து, அவருக்கு பிரதியமைச்சர் பதவியையும் கொடுத்து அவரினூடாக  கோடிக்கணக்கில் பணத்தையும் அனுப்புகின்றது.
இன்று நாம் கஷ்டப்படுவதற்கு அரச எதிர்ப்புத்தான் காரணம். வீடு, வீதி, பாடசாலைக் கல்வி, மலசலகூடம், சமூர்த்தி முத்திரை என்று எதனையுமே கூட்டமைப்பினரால் செய்து தர முடியாது.

அதனால் தொடர்ந்து கூட்டமைப்புக்கு வாக்களிப்பதைப் பற்றி தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். அரசாங்கத்தை நேசிக்கும் மக்கள், அரசு அமுல்படுத்தும் அபிவிருத்தி நன்மைகளையும் துரிதமாக அடைந்து கொள்வார்கள்.
கூட்டமைப்புக்கு வாக்களித்து விட்டு மர நிழல்களுக்குக் கீழே குந்திக் கொண்டிருக்கின்றோம். மீண்டும் பிரச்சினையை உருவாக்கி உங்களை பழையபடி காட்டுக்கு அனுப்பப்பார்க்கின்றார்கள்.

இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று வெளிநாட்டிலிருந்து கூச்சல் போடுபவர்கள், குறைந்தது தங்களது சொந்தப் பணத்தைச் சேர்த்து 100 வீடுகளையாவது கட்டித்தரவில்லை.

இங்கே பிரச்சினை என்று கூறிக்கொண்டே புலம்பெயர்ந்த நாடுகளில் சுகபோகத்தை அனுபவிக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்து அங்கே வாழ்வதாக இருந்தால், இங்கே தொடர்ந்து பிரச்சினை இருக்கிறது என்று அவர்கள் காட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

இப்பொழுது பிள்ளைகள் நிம்மதியாகப் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். வேலைக்குப் போகின்றார்;கள்;. உயிரோடு திரும்பி வருகின்றார்கள். உயிரச்சம் இல்லை, துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் இல்லை. உணவுத் தட்டங்களோடு ஓடிச் சென்று காட்டுக்குள் ஒழிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

கஞ்சி குடித்தாலும் அதுவுமில்லாமல் பட்டினி கிடந்தாலும் நிம்மதியாக மர நிழல்களின் கீழ் உறங்குகின்றோம். இந்த சூழ்நிலையை உருவாக்கியவர் மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான்.

ஆனாலும், அவரைத் தோற்கடிப்பதற்காக பல வெளிநாட்டுச் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எந்த வெளிநாடுகளுக்கும் அடிபணியாத ஒரு வீரபுருஷர் எமது ஜனாதிபதி. நாட்டு மக்களைக் காப்பாற்றிய ஒரே தலைவர் மஹிந்த மாத்திரமே.

நீதிமன்றக் கூட்டிலே அவரை நிறுத்த முயற்சித்துப் பார்த்தார்கள். அதுவும் கைகூடவில்லை. மின்சாரக் கதிரையில் அவரை அமர்த்த வேண்டும் என்றார்கள் அதுவும் தோல்வியில் முடிந்தது.

இப்படி ஒரு தலைவரை இனிக் கண்டுகொள்வதே கஷ்டம். இப்பொழுது இருக்கும் நிம்மதி இனியும் தொடர்ந்திருக்க வேண்டும் என்றால், கட்டாயம் உங்கள் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷவுக்கே அளியுங்கள். அதன் மூலம் நிம்மதியும் அபிவிருத்தியும் கிட்டும்.

அதை நீங்கள் தான் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X