2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வழங்கப்படாத சம்பளக் கொடுப்பனவை வழங்குமாறு வாழைச்சேனை பஸ் டிப்போ ஊழியர்கள் வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 02 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  வாழைச்சேனை பஸ் டிப்போவில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு எதிர்வரும் 08ஆம் திகதியுடன் முடிவடைகின்ற  2 மாத காலத்தில் தங்களுக்கு 2 மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால், தாங்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த டிப்போவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுவதுடன், 19 பஸ் வண்டிகள் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருமானம் ஈட்டப்படுகின்றது.

இருப்பினும்,  இங்கு கடமையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 2 மாதங்களாக சம்பளம்  வழங்கப்படவில்லை எனவும் ஊழியர்கள் கூறினர்.
இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் முழுமையாக கடமையில் ஈடுபடுகின்றனர்.

2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் தங்களது குடும்பங்களின் ஜீவனோபாயம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து உரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்தை  மாதாமாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை சாலை முகாமையாளர் எம்.ஏ.அஸீஸிடம் கேட்டபோது, வாழைச்சேனை சாலையில்  கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்குரிய சம்பளக் கொடுப்பனவு நிலுவையாக உள்ளது. அதை  இம்மாத சம்பளத்துடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார்.

இவ்வாறான சம்பளக் கொடுப்பனவு பிரச்சினை இங்கு மாத்திரமல்ல,  நாடு பூராகவும் இருந்து வருகிறது, இருப்பினும், வாழைச்சேனை டிப்போவில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான இம்மாத சம்பளக் கொடுப்பனவுடன் நிலுவையாக உள்ள கொடுப்பனவையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X