2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தமிழர்களின் வாக்குகளை குறைவாகப் பெற்றாலும், மஹிந்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்: அருண் தம்பிமு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 03 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

'கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழர்களின் 15,000 வாக்குகள் கிடைத்தன. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த  மாவட்டத்திலிருந்து ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு தமிழர்களின் 60,000  வாக்குகள் கிடைத்தன. இதனால், நடந்தது என்ன? தமிழர்களின் வாக்குகளை  குறைவாகப் பெற்றாலும், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்'.

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத்தொகுதி  அமைப்பாளர்  அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத்தொகுதி அலுவலகம் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் இன்று திங்கட்கிழமை (03) திறந்துவைக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'சரத் பொன்சேகா தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்?  அவருக்கு வாக்களித்தமைக்கு காரணம் என்ன என்று கேட்டமைக்கு தமிழ்த் தேசியம் என்கின்றனர். இனிமேல் வரும் தேர்தல்களில் நீங்கள் சிந்தித்து வாக்களியுங்கள்.

நானும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையுமாறு என்னிடம்  கோரினார். ஆனால்,  நான் இணையவில்லை. அரசிலிருந்து  கொண்டு எமது தமிழ்த் தேசியத்தை வெல்லுவோம்.
இன அடிப்படையில் இல்லாமல், தமிழ் பேசும் சமூகம் என தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்து எமது பிரச்சினைகளை தீர்க்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சம் தமிழ் மக்களும் 145,000 முஸ்லிம்களும் உள்ளனர்.  எதிர்காலத்தில் உங்களது பிள்ளைகளின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்காக தமிழ் மக்களாகிய உங்களது சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். நீங்கள் ஆளும் கட்சியை ஆதரிப்பதுடன், ஜனாதிபதித் தேர்தலில் வெல்லவுள்ள அபேட்சகருக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதே எமது சமூகமும் நாமும் முன்னேற்றத்தை காணமுடியும்.
நான், பொருளாதாரத்தை தேடுவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்து அரசியலுக்கு வரவில்லை. எனது குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக மேம்பட்டவர்கள். அது உங்களுக்குத் தெரியும்.

எமது இளைஞர்கள் வெளிநாடு என்று செல்கின்றனர். எனது கனவு தமிழ் இளைஞர்கள் மட்டக்களப்பில் வாழ வேண்டும். நீங்கள் எந்த நாடு சென்றாலும், எமது நாடு மாதிரி இல்லை. அதனாலேயே,  நாட்டினதும் எமது மக்களினதும்;; நலன் கருதி இலங்கை வந்து அரசியலில் இணைந்துள்ளேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சகோதரர்கள் போல், மட்டக்களப்பில் முஸ்லிம்;களும் தமிழர்களும் இணைந்து இணைந்து மாற்றத்துக்கான  செயல்களில் ஈடுபடுவோம்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X