2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'மலேசிய விமானத்தை தேடுவது போல மண்ணுக்குள் புதையுண்டவர்களை தேடவும்'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 04 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை மீரியாபெத்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணியை  இடைநிறுத்தாது தொடர வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.துரைராஜசிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்  நல்லையா வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

'மலேசிய விமானம் இன்னும் தொடர்ச்சியாக தேடப்பட்டுவருகின்றது. அவ்வாறே, மண்சரிவால் புதையுண்டவர்களை தேடும் பணியையும்  கைவிடக்கூடாது என்பது எமது வேண்டுகோளாகும்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களை பார்வையிட்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக  ஏனைய பகுதிகளிலிருந்துவரும் உறவுகளை அனுமதிக்கவேண்டும்.

கொஸ்லாந்தை, மீரியாபெத்த பகுதிக்குச் ஞாயிற்றுக்கிழமை (2) சென்று அங்குள்ள நிலைமையை பார்வையிட்டதுடன்,  கேட்டும் அறிந்துகொண்டோம்.  முதலில்  மண்சரிவு இடம்பெற்ற இடத்துக்குச் சென்று நாம் பார்வையிட்டோம். அந்த இடத்தைப்  பார்ப்பதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால்,  எமது சிறப்புரிமை மூலம் நாம் அங்கு சென்று பார்வையிட்டோம்.

இயந்திரங்கள் மூலம் மீட்புப்;பணி அங்கு மேற்கொள்ளப்படுகின்றது. 200 இற்கும்; மேற்பட்ட இராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபடுகின்றனர். அங்கு நாம் நின்ற வேளையில் எவ்வித புதையுண்ட உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பின்னர், அங்கிருந்து வந்து சில முகாம்களுக்குச் சென்று பாதிப்படைந்த மக்களை பார்வையிட்டோம்.

நாங்கள் அங்கு சென்றதும் அந்த மக்கள் கூறிய செய்தி என்னவென்றால்,  வடக்கு, கிழக்கிலிருந்து எமது உறவுகள் வந்து எம்மைப் பார்த்து ஆறுதல் கூறும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது எனக் கூறினார்கள்.

மேலும்,  அங்குள்ள குறைபாடுகள் பற்றி அவர்கள் கூறினார்கள். தாங்கள் வெளியே செல்ல முடியாமலிருப்பதுடன், வெளியிலிருக்கின்றவர்கள் உள்ளே வந்து பார்க்கமுடியாமல் இருக்கின்றது.  குளிப்பது உள்ளிட்ட  உள்ளக வசதிகள் குறைவாக இருக்கின்றன என்றும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தார்கள்.

இந்த உள்ளக வசதிகள் இல்லாமை தொடர்பில் அங்குள்ள நிர்வாகத்துடன் நாம் கலந்துரையாடி, நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தோம்.  பதுளை மாவட்ட அரசாங்க அதிபரையும் நாங்கள் சந்தித்து மக்கள் கூறிய குறைபாடுகள் பற்றியும் எடுத்துச் சொன்னோம்.
பொதுவாக பொதுமக்கள் வந்து தங்கள் உறவினர்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம். அங்கு சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதும் எமக்குத் தெரியும். ஆனால், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மனிதாபிமான ரீதியில் செயற்பட வேண்டும் எனவும் அவருக்கு வலியுறுத்தினோம்.

எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி, 5 நிலையங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். பூனாகலை தமிழ் மகா வித்தியாலயம், பூனாகலை சிங்கள மகா வித்தியாலயம், பூனாகலை தமிழ் மகா வித்தியாலயம் இல. 02, கொஸ்லாந்தை கணேசா வித்தியாலம், ஹல்துமுல்ல தமிழ் மகா வித்தியாலம் ஆகியவற்றில்; மக்கள் இருக்கின்றார்கள்.

இதில் மீரியாபெத்த தோட்டத்திலிருந்து சென்ற மக்கள் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இருக்கின்றார்கள். பொதுவாக நிவாரணங்களை பொறுத்தமட்டில் அரச அதிபருடைய தகவலின் படி போதுமானளவுக்கு நிவாரணம் இருப்பதாகவும் அதனை விநியோகிப்பதற்கான நடைமுறைச் சிக்கல்கள் பல இருப்பதாகவும் அத்துடன் நாம் விடயம் தொடர்பாகவும் நடிவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் மக்களிடம் இருந்து அறிந்த தகவல்களின் படி 40 தொடக்கம் 60 பேர்வரை காணவில்லை என்றும் திட்டவட்டமாக கூறமுடியாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அனர்த்தத்தின் காரணமாக 10 பிள்ளைகள் தாய், தகப்பன் இருவரையும் இழந்திருக்கின்றார்கள். 68 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை இழந்திருக்கின்றார்கள். இந்த பிரதேசம் கிட்டத்தட்ட 40 அடிவரை மண்ணால் மூடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

நாங்கள் அறிந்ததன் படி 2005ஆம் ஆண்டு இதே மீரியாபெத்த தோட்டப்பகுதிக்கு ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருந்து. ஆனால், அது வெறுமனே எச்சரிக்கையாகவே இருந்தது. அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதே வருடம் அங்கு ஒரு மண்சரிவு இடம்பெற்றது. பின்னர் அங்கு அவர்களை மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டு மண்சரிவு சம்மந்தமான மீண்டும் ஒரு எச்சரிக்கை விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. எனவே இம்முறை வெறுமனே எச்சரிக்கையோடு மாத்திரம் அரச நிர்வாகம் நிறுத்திக் கொள்ளாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பான இடங்களில் அவர்களுக்கான வீடுகள் அமைக்க வேண்டும்.  அந்த வீடுகள் உறுதியாகவும் மக்கள் வாழக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இந்த மக்களை இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக லயத்தில் வாழ்ந்துள்ளார்கள். அதாவது, லயத்தை  குதிரைக்கொட்டில் என்றே கூறுவார்கள். அதிலேயே அவர்கள் இத்தனை காலமும் வாழ்ந்துள்ளார்கள்.

அவர்கள் திரும்பத்திரும்ப எம்மிடம் தெரிவித்தது தோட்ட மனிதவள நிதியத்தை இதில் சம்மந்தப்படுத்தப்படுத்துவது பற்றி அரசாங்கம் மீளவும் யோசிக்க வேண்டும். அவர்களின் விருப்பத்தின் படி தேசிய அபிவிருத்தி அதிகாரசபையிடம் மொத்த பொறுப்பையும் கொடுப்பதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.

இந்த அனர்த்தம் என்பது சாதாரணமாக ஒரு மனித நேயத்திற்கு அப்பால் நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கு கூடுதலான ஒரு ஈடுபாட்டைக் கொடுத்திருக்கின்றது. அவர்கள் எமது உறவுகள். எமது தமிழ் அரசுக் கட்சி தோற்றம் பெறுவதற்கு காரணமே தோட்ட தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதே காரணம். 1949ஆம் ஆண்டு 03ஆம் இலக்க இந்திய - பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அன்று குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர் மக்களின் குடியுரிமையை பாதுகாப்பதற்காகவே தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து தந்தை செல்வாவினால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தோற்றம் பெற்றது.

இந்த மலையக மக்களைப் பொறுத்தமட்டில் எங்களது ஈடுபாடு அரசியல் ரீதியாகவும் மனிதாபிமான  ரீதியாகவும் மிகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வரலாறு அனைவருக்கும் தெரியும். எமது தமிழ் அரசுக் கட்சி அரசாங்கத்துடன் ஏற்படுத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் நாங்கள் மலையக மக்களின் குடியுரிமையை வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இவ்வாறான அரசியல் தொடர்பான பேணுகைகளை நாம் மலையகத்துடன் வைத்திருக்கின்றோம். இப்பொழுது இந்த அனர்த்தம் தொடர்பான விடயம் எமது உறவுகளை மீண்டும் பேணுவதற்கு வழிவகுத்திருக்கின்றது.

பாதிப்புக்குள்ளான மக்கள் தொடர்பில் அவர்களின் எதிர்கால மேம்பாடு தொடர்பாக நாங்கள் நிதியுதவிகளைச் செய்து அதனை அதை முறைப்படி ஒழுங்குபடுத்தி நிரந்தரமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்வதற்கு ஏற்ற விதத்தில் அரசையும் அதன் சம்மந்தப்பட்ட செயற்பாடுகளையும் ஊக்குவிப்பதுதான் எமது செயற்பாடாக இருக்கும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X