2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மேய்ச்சல்தரை காணிகள் விவசாயத்துக்கு வழங்குவதை தடுத்துநிறுத்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 10 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3,000 ஏக்கருக்கும் அதிகமான மேய்ச்சல்தரை காணிகளை,  ஏனைய மாவட்டங்களிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு விவசாயத்துக்காக வழங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில்  மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை  இன்று திங்கட்கிழமை (10) சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த விடயம் தொடர்பான  மகஜரும் இதன்போது  கையளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஈரலக்குளம் ஏ கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மாதவன, மயலத்தன்மடு, மாந்திரி ஆறு ஆகிய பகுதிகளில் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட  காணிகளில்;, சுமார் 3,000 ஏக்கர் காணிகளை அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள பெரும்பான்மையின விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள்; முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பில் கடந்த 4ஆம் 05ஆம் 06ஆம் திகதிகளில் வனபரிபாலன திணைக்களத்தால் ஜி.பி.எஸ். மூலம் நில அளவை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மேய்ச்சல்தரைக் காணிகள் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுமானால், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

மேலும், அங்குள்ள  இராணுவ முகாம்களின் உதவியுடனும் சில  அரசியல்வாதிகளின் உதவியுடனும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 150,000 கால்நடைகள் மேய்ச்சல்தரைக் காணிகளையே நம்பியுள்ளன. பல வருடங்களாக கால்நடை வளர்ப்பாளர்கள் மேற்படி பகுதிகளிலேயே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் இந்த விடயம் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திகுழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோதிலும், எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ள நிலையே உள்ளது.

இதேபோன்று, கடந்த வருடங்களிலும் காணிகள் வழங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இந்த நிலையில், மேலும் காணிகளை வழங்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையானது தொடரந்தும் பிரச்சினைகளையே தோற்றுவிக்கும்' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X