2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புலி உறுப்பினர் கைது

Gavitha   / 2014 நவம்பர் 10 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கொலை, கொள்ளை மற்றும் தீ வைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், கடந்த ஒன்பது வருடங்களாக தேடப்பட்டு, பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை, தாம் மாறுவேடத்தில் இருந்து கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார், திங்கட்கிழமை (10) தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் சங்கர் அணியைச் சேர்ந்த ராசா என்றழைப்பட்ட சின்னவன் மணிமாறன் என்பவரையே தாம் கைது செய்திருப்பதாக, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி ஆர். புருஷோத்தமன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த இச்சந்தேக நபர், 2006 மற்றும் 2007ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், கொலை, கொள்ளை மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், அழைப்பு விடுக்கப்பட்டும் விசாரணைகளுக்கு சமூகமளிக்காததால் அவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இந்த சந்தேக நபர், ஞாயிற்றுக்கிழமை (09) அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவிலுள்ள அட்டப்பள்ளம் அல்லிமுல்லைச் சந்தி எனுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மாம்பழ வியாபாரிகள் போல் தாங்கள் மாறுவேடத்தில் இருந்தே சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் அதிகாரி புருஷோத்தமன் மேலும் கூறினார்.

பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் பணிப்புரைக்கமைவாக, ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்கிரமவின் வழிகாட்டலுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளான எம்.ஏ.சி தாஹிர் 64931, ஆர்.புருஷோத்தமன் 73595 ஆகியோர் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மேற்படி சந்தேக நபரைக் கைது செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை (10) நீதிமன்றில் ஆஜர் செய்யவிருப்பதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X