2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பொது வேட்பாளர் யாரென்று தெரிவு செய்ய முடியாத நிலையில் எதிர்கட்சிகள்: ஹிஸ்புல்லாஹ்

Gavitha   / 2014 நவம்பர் 15 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கு, அதை யாரென்று தெரிவு செய்யமுடியாத சூழ்நிலையில் இன்று எதிர்க்கட்சிகள் இருக்கின்றது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தொவித்தார்.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப்பாடசாலையில் தயட்ட செவன எனப்படும் தேசத்துக்கு நிழல் மர நடுகை நிகழ்ச்சித்திட்டத்தின்  ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை (15) இடம்பெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த அரசை தோற்கடிப்பதனூடாக இந்த நாட்டில் மீண்டும் யுத்த சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இந்த நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கும் சில சர்வதேச சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்க கூடாது. இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சமதானத்தை ஏற்படுத்தி அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாக இந்த பிராந்தியத்தில் முன்னேற வேண்டுமாக இருந்தால் உறுதியான அரசாங்கம் நமக்கு தேவை
அந்த அரசையும் ஜனாதிபதியையும் தோற்கடிப்பதற்கு முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியாத ஒரு சூழ்நிலையில் இன்று எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.

இந்த நிலையில் நாங்கள் உறுதியாக இருந்து, ஒரு உறுதியான அரசை உறுதியான ஆட்சியை இந்த நாட்டில் வைத்துக்கொள்வதனூடாக நாட்டைக் கட்டியெழுப்பமுடியும்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நாட்டில் 2020ஆம் ஆண்டு 35 வீதமான நிலம் காடுகளாக மாற்றப்படல் வேண்டும்.
அதனூடாக நல்லதொரு சிறப்பான சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் தேசத்துக்கு நிழல் எனும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் காடுகள் என்பது வெறும் மக்கள் வாழாத பிரதேசங்களில் உள்ள காடுகளல்ல. இவ்வாறான பாடசாலைகள், பொது இடங்கள் வீதிகள் எல்லா இடங்களிலும் மரங்கள் நாட்டப்படல் வேண்டும்.

அதன் மூலம் நல்லதொரு இயற்கையை நல்ல சூழ்நிலையை அழகை உருவாக்க முடியும். ஆகவேதான், இன்று பாடசாலைகள் மட்டத்திலே வைத்தியசாலை, அரச காரியாலயங்கள், பொதுக் கட்டடங்கள் எல்லா இடங்களிலும் மரங்களை நடுகின்ற வேலைத்திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

நமது நாடு முப்பது வருடங்கள் யுத்தத்தில் இருந்தது. அந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்து, நாட்டை யுத்தத்தில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல்கட்ட காலத்தை செலவு செய்தார்.

அதற்கு பின்னர் வீதிகளை அமைப்பது, பாடசாலைகளை கட்டுவது, வைத்தியசாலைகளை நிர்மாணிப்பது, இலங்கை முழுவதும் மின்சாரம் வழங்குவது, மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவு செய்வது போன்ற வேலைத்திட்டங்களினூடாக, இந்த நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி மேற்கொண்டார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மூன்றாண்டுகளுக்கு, மக்களை கட்டியெழுப்புகின்ற, மக்களின் வருமானத்தை அதிகரிக்கின்ற, வறுமையை போக்குகின்ற, வளமான மக்களாக வாழ்கின்ற ஒரு நாட்டையும் கிராமத்தையும் கட்டியெழுப்புவதற்கான பாரிய பணிகளில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று எங்களுடைய அமைச்சு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு ஒரு நாட்டை கட்டியnழுப்பி இன்று ஆசியாவிலேயே பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக நமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், உறுதியான அரசியல் தலைமைத்துவம் தேவை ஒரு உறுதியான ஆட்சி தேவை, ஒரு உறுதியான அரசு தேவை, அந்த அரசை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாம் கொண்டிருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X