2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'இலங்கை கல்வி முறையில் மாற்றம் வேண்டும்'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 16 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

இலங்கையிலுள்ள கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்பதுடன்,  கலை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து தொழில்நுட்பத்துறையில்  அவர்களை ஈடுபடுத்தவேண்டும் என்பதே  தமது நோக்கம்; என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பட்டிருப்புக் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில்  சாதனையாளர் பாராட்டு விழா மட். களுதாவளை மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'கல்வியை அரசியல்வாதிகள், அதிகாரிகள்; அனைவரும் சேர்ந்து வளர்க்கவேண்டியுள்ளது. என்னுடைய நோக்கமும் இதுவே.
எமது மாணவர்களின் பெறுபேற்றை வருடாவருடம் இரட்டிப்பாக்கவேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்விமான்களுடன் சேர்ந்து நான் உழைத்துக்கொண்டிருக்கின்றேன்.

கடந்தகாலத்தில் யுத்த சூழல் காரணமாக படுவான்கரைப் பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.  யுத்தம் முடிவுக்கு வந்து கடந்த 8 வருடங்களாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் எடுத்த முயற்சியால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி முன்னேற்றமடைந்து வருகின்றது.

அரசாங்கத்தால் கல்வி வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காக விஞ்ஞான தொழில்நுட்ப பாடசாலை, நனசலத்திட்டம், ஆயிரம் பாடசாலைத் திட்டம், ஐந்தாயிரம் பாடசாலைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  நனசலத்திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு, ஒரு பாடசாலைக்கு 40 இலட்சம் ரூபாய் படி  கட்டடமும் கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 200 விஞ்ஞான தொழில்நுட்ப பாடசாலைகளில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 8 பாடசாலைகள்  விஞ்ஞான தொழில்நுட்ப பாடசாலைகளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

ஒரு நாட்டில் தொழில்நுட்பம் வளரும்போது, பல மாற்றங்கள் வரும்.  தற்போது வளர்ந்துள்ள நனோ தொழில்நுட்பம் உலகத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. ஆனால், இலங்கையில் நனோ தொழில்நுட்பம் விருத்தியடையவில்லை. அதற்காக மொறட்டுவை பல்கலைக்கழகம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், நனோ தொழில்நுட்பத்தை வளர்க்கவேண்டும் என்பதற்காக அரசாங்கம், பாடசாலைகளில் விஞ்ஞான தொழில்நுட்ப பாடசாலை என்பதையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு எமது பகுதி மாணவர்களையும் பல ஆரய்ச்சிகளில் ஈடுபடுத்தவேண்டும். அப்போதே எமது மாணவர்களும் புதிய, புதிய செயற்பாடுகளையும் கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்வார்கள்.

இவைகள் அனைத்தையும் மென்மேலும் வளர்க்க வேண்டுமாக இருந்தால், எமது மக்கள் அரசியலை சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். அரசியலை எமது குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும். எனவே, எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய ஜனாதிபதிக்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.  இந்த விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்விமான்;கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்' எனக் கூறினார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X