2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'கித்துல், உறுகாமம் குளங்களை இணைக்கும் திட்டம் ஜனவரியில் ஆரம்பம்'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 16 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கித்துல் மற்றும் உறுகாமம் குளங்களை இணைக்கும் பாரிய திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டிலிருந்து  2014ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டிலிருந்து  2015ஆம் ஆண்டுக்கான பெரும்போகச் செய்கை பாதிக்கப்பட்டுள்ள 2,000 விவசாயிகளுக்கு விதை நெல்லுக்கான கொடுப்பனவுகள்  தேவநாயகம் மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை (16) வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இந்தக்குளங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்த வரவு -செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த ஏழு மாதங்களாக எடுத்த முயற்சியின் பலனாக  கித்துல் மற்றும் உறுகாமம் குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 4,500 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகின்றது. அந்த வகையில், இதை ஆரம்பிப்பதற்காக 65 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக்குளங்களை இணைப்பதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யமுடியும். அத்துடன், கல்குடா பிரதேசத்துக்கு குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான நிதியை செலவு செய்து, குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. வாய்க்கால்களும் திருத்தப்பட்டுள்ளன. நடுத்தர குளங்களான புழுக்குனாவக்குளம் உட்பட பல குளங்களை திருத்திக்கொடுத்துள்ளோம். 360 இற்கும்  மேற்பட்ட குளங்கள் திருத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

சிறந்த முறையில் நீர்ப்பாசனத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டு அபிவிருத்தி செய்துள்ளோம்' எனக் கூறினார்.

இங்கு பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுகையில்,


கடந்த வரட்சியால்   பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  2010ஆம் ஆண்டு பாரிய வெள்ள அனர்த்தம் வந்து எம்மை பாதிப்படையச் செய்தது. இந்த வெள்ள அனர்த்தம் வீதிகளை, பாலங்களை, விவசாயங்களை, ஏனைய பொருளாதாரங்களை பாதிப்படையச் செய்தது.

மீண்டும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் நெற்செய்கை விவசாயம், பயிர்ச்செய்கையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. இவ்வாறு தொடர்ச்சியான அனர்த்தங்களுக்கு நாம் முகம் கொடுத்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் பெரும்போக நெற்செய்கையில் பாதிப்பை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன' என அவர் கூறினார்.

ஒரு ஏக்கருக்கு 2,800 ரூபாய் படி  இந்தக் கொடுப்பனவு  வழங்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,  மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்;டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,  மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட கணக்காளர் எஸ்.நேசராசா, விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X