2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மு.கா., சவாலை எதிர்கொள்கின்ற தேர்தலாக அமையலாம்: நஸீர் அஹமட்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 19 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தீர்மானம் எடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சவாலை எதிர்கொள்கின்ற தேர்தலாக இது அமையலாம் என்று கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

நாட்டின் தலைமைத்துவம் தற்போது கடும் குழப்பத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

மாகாண விவசாயிகள் 51 பேருக்கு உள்ளீடுகள் வழங்கும் நடவடிக்கையும்  பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்கள் 21 பேருக்கு  நியமனங்கள்; வழங்கும் நடவடிக்கையும்  ஏறாவூர் அஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மக்களின் இன்றைய அவ நம்பிக்கையான நிலைமைக்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. எந்தவொரு விடயத்தையும் அணுகும்போது அதை அக்கறையுடன் அணுகவேண்டும்.

ஒரு பயங்கரவாத இயக்கத்தை முடித்து பூண்டோடு ஒழித்துவிட்டோம் என்பதற்காக, பயங்கரவாதம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த அடிப்படைப் பிரச்சினையை முடித்துவிட்டோம் என்று அர்த்தமில்லை. பயங்கரவாதம் அழிக்கப்பட்ட பின்னர் இனப்பிரச்சினை பற்றி பேசத் தேவையில்லை என்று அரசாங்கம் எடுத்த நிலைப்பாடே, இன்று அரசாங்கத்தை இந்தளவு இக்கட்டில் மாட்டியிருக்கிறது.

பிரச்சினை என்று ஏதோவொன்று இருந்ததாலேயே, தமிழ் மக்களில் ஒருசாரார் ஆயுதம் ஏந்தவேண்டி வந்தது. அதனாலேயே  வன்முறைகள் வியாபித்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அழிய நேரிட்டன.

பிரபாகரனை கொன்றொழித்ததுடன், இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதை அரசாங்கம் அடியோடு மறந்துவிட்டது. இது இந்த அரசாங்கத்தின் மீது, சிறுபான்மை இனங்கள் வெறுப்படைய காரணமாக அமைந்துள்ளது. இதுவே அடிப்படையில் நடந்த தவறு.

யுத்தத்துக்கு பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் அதிக பிரயத்தனம் எடுத்து, அதில் வெற்றி கண்டுள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   ஆனால், அதற்குச் சமாந்தரமாக மக்களின் மனங்களை வெல்வதில் குறிப்பாக, சிறுபான்மை இனங்களின் மனங்களை வெல்வதில் அரசு தோல்வி கண்டுள்ளது.

சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதவரை, இந்த நாட்டில் பிரச்சினைகள் முடிவுக்கு வராது. அது நீறுபூத்த நெருப்புப் போல என்றும் இருந்துகொண்டிருக்கும்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கமுடியாதொரு இக்கட்டான சூழ்நிலைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. நாங்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றோம். அரசுக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறோம். ஆனால், ஒரு சமூகத்தின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்படாதவரையில், நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்துடன் இருப்பது பற்றிச் சிந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

எதுவாக இருந்தாலும்,  ஒரு சமூகத்தினுடைய தீர்மானங்களை எடுக்கின்றபொழுது, அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கு பாரிய பொறுப்புள்ளது.
சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையும் உத்தரவாதமும் வருகின்றபொழுதே, நாங்கள் ஆதரவு அழிப்பது பற்றி தீர்க்கமான முடிவெடுக்க முடியும். நாட்டின் அரசியலில் அடுத்துவரும் குறுகிய மணித்தியாலங்களுக்குள் எதுவும் நடக்கலாம். தீர்மானம் எடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சவாலை எதிர்கொள்கின்ற தேர்தலாக இது அமையலாம்' என்றார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X