2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விடுதலையாகும் கைதிகள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்: தங்கேஸ்வரி

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 20 , மு.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வீடு சென்று மீண்டும் சமுதாயத்துடன் இணைந்துகொள்பவர்கள் முன்னுதாரணமாக திகழவேண்டும் என்று பாரம்பரிய சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளர் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 15 கைதிகளுக்கான  ஆரம்ப கைவினைக் கைத்தொழில் பயிற்சிநெறி 10 நாட்களுடன் நிறைவுறும் நிகழ்வு  சிறைச்சாலை சபா மண்டபத்தில் புதன்கிழமை (19) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையி;ல்,

'சிறையிலிருந்து விடுதலையாகி மீண்டும் சமுதாயத்துடன் இணையும்போது, நீங்கள் முன்னுதாரணமாக செல்லவேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

தற்போது சிறைக்கூடங்களிலுள்ள கைதிகளுக்கு ஆன்மிகப் பயிற்சி, தியானம், தேகாப்பியாசங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன்,  சிறையிலிருந்து நீங்கள் வெளியில் செல்லும்போது, சமூகவிரோதச் செயல்களிலிருந்து விடுபட்டு வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்காக கைத்தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

சமுதாயக் கண்ணோட்டத்தில், சிறைக்கைதியாக அடைபட்டுக்கிடந்த ஒருவர் என்ற கீழ்நிலை அந்தஸ்தில் உங்கள் பெயரை நீங்கள் தக்கவைக்காமல், சமுதாயத்திலிருக்கின்ற ஏனையவர்களின் வாழ்க்கைக்கும் முன்னுதாரணமாக நீங்கள் திகழ்ந்தால்,  சரித்திரத்தில் ஓர் உதாரண புருஷராய்த் திகழ்வீர்கள்.

இவ்வாறு  முன்னுதாரணமாக திகழும்போது, சமுதாயத்தில் குற்றச்செயல்கள் இடம்பெற வாய்ப்பில்லாமல் போகும்.  இதனை சமூகத் தொண்டாகவும் மனித குலத்துக்குச் செய்கின்ற அறப்பணியாகவும் நீங்கள் கருதவேண்டும். அப்போதே கடவுளின் அனுக்கிரகமும் உங்களுக்கு கிடைக்கும்.

ஜனாதிபதியின் விஷேட சமுதாய சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகளுக்கும் பல்வேறுபட்ட சிறு கைத்தொழில் பயிற்சிகளை வழங்க நாம் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.' எனக் கூறினார்.

இந்த நிகழ்வின் இறுதியில், மட்டக்களப்பு சிறைக்கைதிகளின் வாசிப்பு அறிவை மேம்படுத்துவதற்காக சிறைச்சாலை நூலகத்துக்கு ஒருதொகுதி நூல்களையும்  கே.தங்கேஸ்வரி கையளித்தார்.

சிறைச்சாலைகள் அதிகாரி எஸ்.வி.எச்.பிரியங்கர, சிறைச்சாலைகள் நலன்புரிச்சங்க செயலாளர் வி.ஈதர்ஷன், புனர்வாழ்வு உத்தியோகஸ்தர்களான எம்.ஐ.எஸ்.சபீனா, பி.சுசிதரன், எல்.ஜெயசுதாகரன்,  பிரதான சிறைக்காவலர் ஆர்.மோகனராஜா, அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கே.ஜெயப்பிரியா, ஜே.பிரதீபா, கைதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளர் கே.தங்கேஸ்வரியின் வழிகாட்டலில் இந்தப் பயிற்சிநெறி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X