2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பற்றி வாய் கிளியக் கத்தி அரசியல் செய்வதே துரதிர்ஷ்டம்'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 21 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பற்றி   இன்னமும் சிங்களத் தலைவர்கள் மேடைகளில் வாய் கிளியக் கத்தி அரசியல் செய்வதே இந்த நாட்டிலுள்ள துரதிர்ஷ்டம் என்று உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  மகளிர் அமைப்புக்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் புதன்கிழமை  (19) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'ஜனாதிபதியையும் மாற்றி அரசையும் மாற்றி அமைக்க வேண்டுமென்ற விருப்பம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள ஒருசிலரிடம் மேலோங்கியுள்ளது. ஆட்சியை மாற்றி அமைப்பதற்கான திட்டமொன்று ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது என்ற மறைமுக செய்தியும் பரகசியமாக உலாவத்; தொடங்கியுள்ளது.

ஆனால், இந்த ஆட்சி மாற்றத்திலோ, இருக்கின்ற அரசியல் நடைமுறையிலோ அல்லது தற்போதைய அரசாங்கத்திலோ மாற்றத்தைக் கொண்டுவருகின்ற எந்த முயற்சியும் பெரும்பான்மை சிங்கள மக்களினால் ஒரு சதித்திட்டமாக பார்க்கப்படுகின்றது.

இந்த ஆட்சி மாற்றம் என்ற சிந்தனை வலையில் சிறுபான்மைச் சமூகங்கள் சிறுபிள்ளைத்தனமாக சிக்குப்படக்கூடாது.  ஆட்சி மாற்றத்துக்கான  முயற்சிகள், உலகின் பல நாடுகளில் வெளிநாடுகளின் விருப்பு, வெறுப்பு அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்ற சூழ்நிலைகளையும் நாம் கண்டுவந்திருக்கிறோம். வெளிநாடுகளின் முயற்சிகள் சில இடங்களில் வெற்றியும் அடைகிறது. தோல்வியும் அடைகிறது. வெளிநாடுகளின் விருப்பங்களுக்கெல்லாம் உள்நாட்டு மக்கள் ஆடுகின்ற போக்கு துரதிருஷ்டமானது.

வெளிநாடுகளின் திருகுதாளங்கள் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அவர்களின் விருப்பு, வெறுப்புக்கேற்ப சிறுபான்மைச் சமூகங்கள் செயற்படத் தேவையில்லை. அவர்களின் சூழ்ச்சி வலைகளுக்குள் நாம் சிக்கக்கூடாது. அரசாங்கத்தை மாற்றி அமைக்க வேண்டுமென்ற முயற்சி கோடைகால முகில் கூட்டங்கள் போல, ஒரு குறுகிய காலத்தினுள்; தெரியாமல் மறைந்துவிடும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த ஆட்சியை மாற்றுகின்ற முயற்சி பலிக்கவில்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் அரசை மாற்றுகின்ற முயற்சியை இந்த ஆர்வக்குழுக்கள்  தொடர்வார்கள்.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ளன.   ஆயுதங்களுடன் வன்முறை ரீதியான போரை நடத்திவந்த தமிழீழ விடுதலைப் புலிகள், இந்த நாட்டில் இல்லை. அதன் தலைவரும் இன்று உயிருடன் இல்லை.  ஆனால், ஒரு பெரிய துரதிருஷ்டம், 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவரும் அழிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே.பிரபாகரனையும் பற்றிப் பேசாமல் ஒரு தேர்தலும் நடந்தது இல்லை.

தேர்தல் ஆரம்பிக்கின்ற போதெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் அதன் தலைவர் வே.பிரபாகரனை பற்றியும் வாதப்பிரதிவாதங்கள்; அரசியல் அரங்கத்துக்குள் இழுத்துவரப்படுகின்ற விடயம் நாம் கண்ட அனுபவங்களே.

தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவரும் யுத்த களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்பது இயற்கையானது. நம்பக்கூடியது. இதை  எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவரும் யுத்தக்களத்திலிருந்து  முற்றுமுழுவதுமாக அகற்றப்பட்டிருக்கின்றபோதிலும், இலங்கையின் அரசியல் களத்திலிருந்து வே.பிரபாகரனும் அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இன்னமும் அகற்றப்படவில்லை. இது ஒரு தேசிய அரசியல் பலவீனம் என்றே கூறவேண்டும். வே.பிரபாகரன் இருக்கின்றார் என்ற மாயையைக்  காட்டி அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கும் சில ஊடகங்கள் தள்ளப்பட்டுள்ளன.  கடைசிவரை வே.பிரபாகரன் இராணுவத்தினரின் கைகளில் உயிருடன் சிக்கவில்லை என்று அவர்கள் மக்களை நம்ப வைத்து அரசியல் செய்யப்பார்க்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்று காட்டவேண்டியதும் அவசியமாக இருப்பது போல் தெரிகின்றது.

எப்போது எமது நாட்டில் ஒரு தேர்தல், வே.பிரபாகரனையும் அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும்  பற்றி மேடை மேடையாக வாய் கிளியப் பேசாமல் நடத்தப்படுகின்றதோ, அதுவே  உண்மையான ஜனநாயகத் தேர்தலாக இருக்கமுடியும்.

இன்னமும் எமது நாட்டில் இன ரீதியான பிரிவினைக்குரிய அரசியல் சிந்தனைகள் மாற்றம் பெறவில்லை. நாமெல்லோரும் இலங்கையர்கள் என்ற அற்புதச் சிந்தனை உருவாக்கப்படுகின்றபோதே,  எங்களுக்குள் உண்மையான ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்று அர்த்தம் கொள்ள முடியும்.  அதுவே, நாம் இலங்கையர்கள் என்றும் சுதந்திர விடுதலை கிடைக்கப்பெற்றவர்கள் என்றும் நம்பமுடியும்.

ஆண்டாண்டு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றிப் பேசிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களெல்லாம், இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றிப் பேசுவதை விட்டுள்ளார்கள். அதேபோல, முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவதை தற்போது  முஸ்லிம்களும் நிறுத்தியுள்ளார்கள்.

ஆனால், பொதுவாக எல்லா சிங்களத் தலைவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் அதன் தலைவராக இருந்த பிரபாகரனை பற்றியும் இன்னமும் பேசிக்கொண்டே  தென்னிலங்கையில் அரசியல் நடத்துகின்றார்கள். இதுவே இந்த நாட்டிலிருக்கின்ற ஒரு தேசிய அரசியல் பலவீனமாகும். இந்த நிலைமை மாற்றம் பெறவேண்டும்.

எது எப்படியிருந்தாலும், நாம் குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்கள் எம்மை எமக்குள்ளே மாட்டுவிக்கின்ற ஒரு சர்வதேச சதிகளின் அங்கத்தவர்களாக இருக்கக்கூடாது. ஆட்சி மாற்ற சூழ்ச்சி வலைகளில் நாம் ஒருபோதும் அகப்படக்கூடாது.

ஜனாதிபதியால் எனக்கு வழங்கப்பட்ட விஷேட கொடுப்பனவான 30 மில்லியன் ரூபாவிலிருந்து இந்த வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு உதவிகரமாக இருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் எனது மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்க நான்  கடமைப்பட்டுள்ளளேன்.

வாழ்வாதார சுயதொழில் முயற்சிக் கடனுதவி வழங்கும் நிகழ்வில் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா, கணக்காளர் எஸ்.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X