2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சலசலப்புக்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இரையாகக்கூடாது: பஷீர்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 21 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வெறும் இனவாத சலசலப்புக்களுக்கும் வெளிநாட்டு சூழ்ச்சிகளுக்கும் சிறுபான்மை இனங்கள் இரையாகக்கூடாது என்று உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூர் ரூபி முஹைதீன் கிராமத்துக்கு வியாழக்கிழமை (20) சென்ற அமைச்சர்,  அங்குள்ள மக்களுடனான சந்திப்பின்போதே  இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'2002ஆம் ஆண்டு நான் வீடமைப்பு பிரதியமைச்சராக இருந்தபோது, ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ரூபி முஹைதீன் கிராம வீட்டுத்திட்டம் பின்னாட்களில் முற்றிலும் இலவச வீட்டுத்திட்டமாக மாற்றப்பட்டு, மக்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் இன்னும் பல மத்திய அரசின் அமைச்சர் குழாத்தால் திறந்துவைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ரூபி முஹைதீன் கிராமத்துக்கு எல்லாவகையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, இந்தக் கிராம மக்கள் சுற்றிவளைத்து ஏறாவூருக்கு செல்வதைத் தவிர்த்து, அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும்  திட்டமுள்ளது. ரூபி முஹைதீன் கிராமத்துக்கான  இன்னொரு பாதை புன்னைக்குடா வீதியுடன் இணைக்கப்படும்போது  மக்கள் இலகுவாக  பயணிக்கமுடியும்.

வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ், இந்தக் கிராமத்திலுள்ள ஐம்பது வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கான  ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே, குழாய் நீர்விநியோகம் செய்யப்பட்டுள்ளது.   காலம் சற்றுத் தாமதமானாலும் இவ்வீட்டுத் திட்டத்துக்குரிய எல்லா அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த வீட்டுத்திட்டத்தை  அபிவிருத்தி செய்வதற்கான இத்தனை கோடி ரூபாய்களையும் எனக்குத் தந்தது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தோடு இணைந்தமைக்கு ஏறாவூருக்கு கிடைத்த நன்மைகளில் பெரிய நன்மை இந்த ரூபி முஹைதீன் வீட்டுத்திட்டத்தை  குறிப்பிடமுடியும்.

ரூபி முஹைதீன் கிராமவாசிகள்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்பதால், இந்தக் கிராமமே உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றது. தேசத்துக்கு மகுடம் திட்டம் 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்துக்கு கிடைத்தபோது, இந்தக் கிராமத்தையும் அதனூடாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்று முடிவெடுத்தோம்.

வறுமைப்பட்ட ஒதுக்குப்புற கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும் என்ற மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ், நான் காட்டிய அக்கறையால்,  இப்பொழுது இந்தக் கிராமம் அபிவிருத்தியடைந்திருக்கின்றது. ஆனால், இந்த வீடுகளை யாரும் கவனக்குறைவாக பராமரிக்கக்கூடாது. இந்த வீட்டுத்திட்டத்தை நிறைவுசெய்வதில் அதிக காலம் எடுத்துள்ளது. அதற்கு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டுமொத்த சமூகத்துக்கான  விடயங்களில் குரல் கொடுப்பதில் முன்னுரிமை அளிப்பதால், இந்த விடயங்களை செய்துமுடிப்பதில் ஓரளவு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

சமூகம் சார்ந்து குரல் கொடுக்கும் அடிக்கடி சார்ந்திருக்கும் அரசுகளுடன் முரண்பாடுகள் ஏற்படுவதால், சிலவேளை அரசாங்கங்களுடன் ஒட்டிக்கொண்டிராமல் வெளியேறவேண்டி ஏற்பட்ட நிகழ்வுகளும்; நடந்திருக்கின்றன.  இதுபோன்ற சமூகம் சார்ந்து, கொள்கை சார்ந்து, அரசோடு முரண்படும் காரணங்களாலேயே இந்த வீட்டுத்திட்டத்துக்கு நிதி கொண்டுவந்து சேர்ப்பதிலும் காலதாமதம்  ஏற்பட்டது.

சமூகத்துக்கான நெருக்கடிகள் வரும்பொழுது இவ்வாறே  முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் இயங்கவேண்டியிருந்தது. அதனாலேயே அபிவிருத்தி என்ற விடயங்களில் தொடர்ந்தேர்ச்சையாக இயங்கமுடியாத சூழ்நிலை எமக்கு இருந்தது.  இந்த அரசாங்கத்தோடு இணைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய அபிவிருத்தி கண்டிருக்கிறது.  தொடர்ந்தும் இந்த அபிவிருத்திகளை நாம் முன்னெடுக்கவேண்டுமாயின், அரசாங்க ஆதரவு இன்றியமையாததாக உள்ளது. எனவே, மக்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்துக்கு நன்றியுடையவர்களாக இருந்தால், தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட, கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யமுடியும் என்பதை மக்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்' என்றார்.

இந்தச் சந்திப்பின்போது ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜே.எம்.முஸ்தபா, கணக்காளர் எஸ்.சிவலிங்கம், வீடமைப்பு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.அப்துல் றஹுமான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், வாழ்வின் எழுச்சித்திட்ட உத்தியோகஸ்தர்கள், கிராம சேவகர், கிராம மக்கள்  கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X