2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'இலங்கையில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 25 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சுனாமிக்கு பின்னர் யுத்தம் முடிவடைந்த நிலையில், இலங்கையில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக கூரியர் உதவி  பத்திரிகையின் தலைவர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பீற்றர் ரபிள்  தெரிவித்தார்.

ஒஸ்ரியா  நாட்டு கூரியர் பத்திரிகை வாசகர்கள் அனுப்பிய பணமான 1,500 மில்லியன் ரூபாய்  இலக்கை எட்டியது. அந்தப் பணம் இலங்கை சுனாமி மீளமைப்புப் பணிகளுக்கு உதவியதாகவும் அவர் கூறினார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  வட்டவான் சமாதான கிராமத்தின் 199 சுனாமி நிரந்தர வீட்டுத்திட்ட மக்களுடனான கலந்துரையாடல், வட்டவான் சமூக மண்டபத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சுனாமி பாதிப்புக்குள்ளான தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் கிழக்கிலங்கையில் வட்டவானிலும் எமது ஒஸ்ரிய நாட்டு மக்களின் நிதியுதவியுடன் வீடமைப்புத்திட்டங்களும் வாழ்வாதாரத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கிலங்கையில் எமது திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் நம்பிக்கையை வென்ற வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் கலாநிதி ஆரியட்ன தலைமையிலான சர்வோதய இயக்கம் கைகொடுத்தது.

எமது சுனாமி வாழ்வாதாரத்திட்டங்களும் நிரந்தர வீடமைப்புத்திட்டங்களும் 2008ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தன. இப்பொழுது எமது பயனாளிகளின் சமகால நிலைமைகளை அறிந்துகொள்வதற்காக குறுகியகால விஜயத்தை மேற்கொண்டு நாம் இலங்கை வந்துள்ளோம். தென்பகுதிக்குச் சென்று அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை பார்வையிட்டோம்.

சுனாமிக்கு பின்னர் யுத்தம்; முடிவடைந்த நிலையில், இலங்கையில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. பாலங்கள், பாதைகள், பெருந்தெருக்கள்,
அதிவேக நெடுஞ்சாலைகள், கல்விக்கூடங்கள் என்று நாடு பூராகவும் அபிவிருத்தி மாற்றத்தை அவதானிக்கமுடிகிறது.

அதேவேளை, எங்களது நாட்டு மக்களால் சுனாமி மீளமைப்புக்காக இலங்கைக்கு அளிக்கப்பட்ட உதவிகளும் தகுந்த முறையில் சரியான திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டு வெற்றியளித்திருக்கிறது. இது பற்றி பயனாளிகளான நீங்களும் கொடையாளிகளான நாங்களும் மகிழ்ச்சியடைய முடியும்.' என்றார்.

இங்கு உரையாற்றிய வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி,

'யுத்தத்திலும் சுனாமித்தாக்கத்திலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வாகரை, வட்டவான் மக்கள்,  அதிலிருந்து மீண்டெழுவதற்கு ஒஸ்ரியா நாட்டு உதவியும் சர்வோதய நிறுவனத்தின் பங்களிப்பும் இன்றியமையாததாக இருந்துள்ளது.

பிரதேச மக்களுக்கு கிடைத்த ஒரு அசையாச் சொத்தாக இந்த வீடமைப்புத்திட்டத்தை குறிப்பிடமுடியும். எனவே, நீங்கள் உங்கள் உழைப்பிலிருந்து ஓர் இல்லத்தை அமைப்பதற்காக செலவிடவேண்டிய தேவை இப்பொழுது இல்லை.  அந்தப் பணத்தை மீதப்படுத்தி நீங்கள் உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக செலவிடமுடியும்.

கல்வி அறிவினூடாக அடையப்பெறும் பொருளாதார அபிவிருத்தியே ஒரு சமூகத்தின் முழு நிறைவான அபிவிருத்தியாகக்கொள்ள முடியும்' என்றார்.

இந்தச் சந்திப்பில் சர்வோதய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வின்யா ஆரியரட்ன, வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி, சர்வோதய நிலையத்தின் பிராந்திய இணைப்பாளர் ஈ.எல்.அப்துல் கரீம், மாவட்ட இணைப்பாளர் எஸ்.மதனகுமார், கூரியர் உதவி பத்திரிகை நிறுவனத்தின் அதிகாரி மக்ஸ் சான்ற்னர் உள்ளிட்ட அதிகாரிகளும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X