2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க. பலமற்ற எதிர்க்கட்சி: சாணக்கியன்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 16 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

பிரதான எதிர்க்கட்சி சார்பாக ஐனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தமுடியாதளவுக்கு ஒரு பலமற்ற எதிர்க்கட்சியென்றால், இந்த உலகத்தில் அது ஐக்கிய தேசியக் கட்சி என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இரண்டாவது தடவையாகவும் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவருக்கு பின்னால் நிற்பது இந்தக் கட்சியின் இயலாமையை காட்டுவதாகவும் இவ்வாறான பலமற்ற கட்சியை நம்பி இம்முறை எமது தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது என்றும்; அவர் கூறினார்.

பட்டிருப்புத்தொகுதியிலுள்ள விவேகானந்தபுரம் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு (15) மக்கள் சந்திப்பு  நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பட்டிருப்புத்தொகுதி தனித் தமிழ்த்தொகுதியாகும்.  இந்த தொகுதியிலிருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில்  சிந்தித்து  நல்ல  முடிவை எடுக்கவேண்டும். ஏனெனில், ஏனைய சமுதாயத்தின் வளர்சியைப்போன்று, சகல வளங்களையும் பெற்று நாம் வாழவேண்டும். இதற்கான நல்ல சந்தர்ப்பம் இப்பொழுது வந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி, பிரிவினைவாதம் பேசுகின்ற கட்சிகளுடனும் ஸ்திரமற்ற எதிர்க்கட்சியுடனும் சேர்ந்து பொதுவேட்பாளர் செயற்படுகின்றார்.

ஸ்திரமற்ற கட்சியென்று  ஏன் கூறுகின்றேன் என்றால், 2010ஆம் ஆண்டு இவ்வாறே  கூட்டுச்சேர்ந்துகொண்டு தேர்தலில் பல கட்சிகளை  ஒன்றிணைத்து இறங்கி, அது சின்னாபின்னமாகியது. இதை  வைத்துக்கொண்டே கூறுகின்றேன். 

ஒரு நாட்டில் பல கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கூட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதானது, பலமான கட்சிகளே கையெழுத்து இடுவாதாகும். ஆனால், இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகளின்  கூட்டமைப்பில் முதன்முறையாக தனி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளார்கள்.  அந்த வகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கவேண்டும் என்று ஐhதிக ஹெல உறுமய கட்சியும் நிறைவேற்று அதிகாரத்தை  இல்லாமல் செய்யவேண்டும் என்று ஜக்கிய தேசியக் கட்சியும் கூறுகின்றன.  இவ்வாறான சில முரண்பாடுகளும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் காணப்படுகின்றன.

இந்த பொது அணி வெற்றி பெற்றால், சிறுபான்மை மக்களுக்குரிய தீர்வை  வழங்குவதற்கு நிறைவேற்று அதிகாரம் இல்லாமல் வழங்கமுடியாது என்பது உண்மையாகும். இவ்வாறன நிலையில், எதிரணிக்கு வாக்களித்து, வெற்றி பெறாத ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கின்ற சந்ததியாக மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் மாறக்கூடாது. 

அள்ளி, அள்ளி எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதனால் எந்தவித பிரயோசனமும் இல்லை. இதுவொரு நாடாளுமன்றத் தேர்தலும் இல்லை. இதில் இரண்டு பெரும்பான்மை இனத்தவர்களுக்கே வாக்களிக்கவேண்டும்.  எனவே, எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவருக்கு எமது மக்கள் வாக்களிக்கவேண்டும்.

தற்போது பொதுவேட்பாளர் அரசாங்கத்தின் ஊழல் பற்றி பேசுகின்றார். அரசாங்கத்தில் அவர் அமைச்சுப்பதவி வகிக்கும்போது,  அந்த ஊழல் அவருக்கு தெரியவில்லையா?;  அரசாங்கத்தில்  அங்கம் வகிக்கும்போது, ஊழல் பற்றி மக்களுக்கு ஏன் அவர்; தெரிவிக்கவில்லை. தற்போது அவர் இவ்வாறான ஊழல் கதைகளை மக்கள் மத்தியில் தெரிவித்து தனது சுயநலவாத அரசியலை பயன்படுத்துகின்றார்.

பொதுவேட்பாளர்  ஆரம்பத்திலேயே அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருந்தால், மக்கள் அவரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால், தற்போது அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பட்டிருப்புத்தொகுதி மக்கள் உணர்வுபூர்வமாக சிந்திக்காமல், அறிவுபூர்வமாக சிந்தித்து எமது மக்களின் உரிமைகளை பெற்றெடுப்பதற்கு எமது மக்கள் வழங்குகின்ற ஆணையாக நினைத்து இத்தேர்தலில் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X