2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இனங்களை மஹிந்த அரசு பிளவுபடுத்தியுள்ளது: ரணில்

Gavitha   / 2014 டிசெம்பர் 27 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர்களை மஹிந்த அரசு பிளவுபடுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில் சனிக்கிழமை (27) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு இந்த அரசாங்கம் உதவவில்லை. இடர் முகாமைத்துவ நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை மஹிந்த அரசு தனது கட்சிக் கூட்டத்துக்கு ஆட்சேர்த்து சாப்பாடும் காசும் கொடுப்பதற்குப் பாவித்துள்ளது.
நாட்டில் உண்மையான அபிவிருத்தி இடம்பெறவில்லை. இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர்களை இந்த அரசு ஒற்றுமைப்படுத்தவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் மஹிந்த அரசு தீர்க்கவில்லை. யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிட்டுள்ளது.

தனது நலனுக்காக ஒரு சில குழுக்களை உருவாக்கி முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தினார் மஹிந்த. பௌத்த தலைமைப்பீடங்கள் இந்த நாட்டிலே ஒரு மத முரண்பாட்டை ஏற்படுத்த வேண்;டாமென்று மஹிந்தவை எச்சரித்தது. ஆனாலும் மஹிந்த அரசு அதனைத்தான் செய்தது.

இப்பொழுது இந்த நாட்டில் வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் பறங்கியர்களும் மீண்டும் இந்நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக ஒன்று சேர்ந்திருக்கின்றோம்.

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எட்டப்படும். விரும்பியவர்கள் விரும்பிய மத்ததைப் பின்பற்ற நாம் உரிமைகளை வழங்குவோம்.

விகாரை, கோயில், பள்ளிவாசல்கள், தேவாலயங்களை நாம் பாதுகாப்போம். மத ஸ்தலங்களை சேதப்படுத்தியவர்களுக்கெதிராக நாம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.

மொழி உரிமை, மத உரிமை, மனித உரிமை என்பன பாதுகாக்கப்படும்.

இலங்கையர்கள் எவரும் இரண்டாந்தரப் பிரஜைகளாக முடியாது. தமிழர் முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் அனைவரும் இலங்கையர்கள். அவர்கள் முதலாந்தரப் பிரஜைகள்தான்.

எல்லோரையும் ஒரே நீதியால் பாதுகாப்போம். நாம் ஆட்சிக்கு வந்தால் பத்து அத்தியாவசியப் பொருட்களுக்கு உடனடியாக விலையைக் குறைப்போம்.

அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படும். தனியார் துறையினரும் தமது ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்படும்.

கிழக்கு மாகாணம் அபிவிருத்தி வலயமாக பிரகடனப்படுத்தப்படும்.10 இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். சமூர்த்திக் கொடுப்பனவு இருநூறு மடங்காக அதிகரிக்கப்படும். பிச்சைக்கார சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க மாட்டோம்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் (தியேட்டர் மோகன்) தலைமையில் அவரது செல்லம் பிறீமியர் பட்மாளிகை முன்றலில் இன்று நண்பகல் கூட்டம் இடம்பெற்றது.

எனவே இவை எல்லாம் நடக்க நீங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X