2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த எனது நண்பர், அவருக்கு ஓய்வு கொடுப்போம்: ரணில்

Gavitha   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இனவாதத்தினால் தனது அரசியல் இலக்குகளை அடைய முடியாததால்,  மதவாதத்தை தூண்டி, தனது இலக்கை அடைவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ முற்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காத்தான்குடியில், சனிக்கிழமை (27) பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இப்பிரதேசத்தில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய போதும் முஸ்லிம் மக்களின் ஆதரவு இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் கிடைத்திருக்கின்றது.

முஸ்லிம் மக்களுடைய ஒத்துழைப்பு எமக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், புலிகளின் பயங்கரவாதத்தை எம்மால் ஒழித்திருக்க முடியாது.

இவ்விடயத்தை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதுடன், இலங்கை தேசமென்பது பல இன மக்களுக்கு சொந்தமானது என்பதை நாம் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். என்றாலும் இந்த உண்மையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறந்துவிட்டார்.

இனவாதத்தினால், தமது அரசியல் இலக்குகளை அடைய முடியாத போது, மதவாதத்தை தூண்டி தனது இலக்கை அடைவதற்கு அவர் முற்பட்டார்.

பள்ளிவாயல்களை உடைக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்தார். உங்களுக்கு எதிராக ஊடகங்களினூடாக பல்வேறு விமர்சனங்களை  செய்வதற்கு அவர் தாராளமாக இடம் கொடுத்திருந்தார்.

முஸ்லிம்களில் பலர் உயிரிழந்தனர். முஸ்லிம்கள் அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்தார்கள். என்றாலும் குறுகிய காலத்தில் அவருக்கு அது சார்பற்றதாக மாறியிருக்கின்றது.

இப்போது, இனவாதத்தால் மத வாதத்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலை வெல்ல முடியாது என்பது உறுதியாகி விட்டது.
அவரை தோற்கடிப்பதற்காக, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். மீண்டுமொரு யுத்தம் உருவாகுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

அதனால் தான் ஜனவரி 08ஆம் திகதி மைத்திரிபாலவுக்கு வாக்களிக்குமாறு நாங்கள் கேட்கின்றோம்.

மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு, அன்னச் சின்னத்துக்கு வாக்களியுங்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கின்ற நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை ஜனாதிபதியாக்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

எமது தேசத்தின் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். அதே போல மக்களுக்கு நான் நிவாரணமளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஜாதிக ஹெல உறுமையும் சரத் பொன்சேகாவும் அதே போன்று தமிழ் முஸ்லிம் கட்சிகளும் இந்த பொதுத்தளத்தில் இருக்கின்றன.

ஒவ்வொரு பிரஜைக்கும் தமது மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரமிருக்கின்றது. அதனை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அதனை யாரும் மறுக்க முடியாது.

பள்ளிவாயல்கள், பௌத்த விகாரைகள், இந்துக் கோயில்கள் ஆலயங்கள் என வணக்கஸ்தலங்கள் உடைக்கப்பட முடியாது. அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

நாம் ஆட்சிக்கு வந்தால், 10 அத்திவாசியப் பொருட்களின் விலைகளை குறைப்போம். எரிவாயுவின் விலையை இன்னும் 300 ரூபாயால் குறைப்போம்.

நான் கப்பல் வராத துறைமுகங்களை அமைக்கப்போவதில்லை. நான் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளேன்.

திருகோணமலையிலிருந்து அம்பாறை வரை உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்குவேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனது நண்பர். அவர் சேவை செய்து களைப்படைந்துள்ளார். அவரை ஜனவரி 08ஆம் திகதியுடன் ஓய்வடையச் செய்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X