2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தையே ஆதரிப்பார்கள்'

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் சென்றாலும், முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தையே ஆதரிப்பார்கள் என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. இதன்; பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக தமது  முடிவை அறிவித்துள்ளது.  இது மிகவும் துரோகத்தனமான செயலாகும்.

தற்போது முஸ்லிம் மக்களை,  முஸ்லிம் தலைவர்கள் புறக்கணித்திருக்கின்றார்கள். இந்தச் செயல் மூலம் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவுள்ள  நன்மைகளை அவர்கள் தடுத்துள்ளார்கள்.

இலங்கையை பொறுத்தவரையில் இனத்துவேஷம் இன்றி செயற்படுகின்ற ஒரு தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.  யுத்த காலத்தில் அனுபவித்த

துயரங்களிலிருந்து மக்களை விடுவித்து நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவைத்த தலைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.  

பிரதியமைச்சர்  எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ்வையும் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவையும் நாம் பாராட்டவேண்டும்.  கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அவர்கள் இருவரும் முஸ்லிம் மக்களுக்கு நல்ல தலைவர்களாக இருந்துவருகின்றனர்.  நாம் அரசாங்கத்திடமிருந்து வசதி வாய்ப்புகளை அனுபவித்துவிட்டு, இறுதியில்; விட்டுவிலகுவது துரோகச் செயலாகும். இந்த விடயத்தில் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தேர்தலில்  வெற்றி பெறப்போகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஏனென்றால், மக்கள் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டார்கள். தமிழ் மக்கள் தங்களின்  நன்றிக்கடனை செலுத்துவதற்கும் இது நல்ல சந்தர்ப்பம்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகளை மனதில் கொண்டு மக்கள் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய காலமாகும்.

மாற்றம் வருகின்றபோது எவ்வாறான அபாயங்கள் பின்னால் இருக்கின்றது என்பது எமக்கு தெரியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் மௌனம் சாதித்துவருகின்றது. அவர்களால் எதிரணிக்கு வாக்களிக்குமாறு  வெளிப்படையாக கூறமுடியவில்லை. ஏனென்றால், ஜாதிக  ஹெல உறுமய, ஜே.வி.பி. போன்ற கட்சிகள் எதிரணியில் இருக்கின்றன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X